கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன்மேல் அரசியல் செய்வதற்கு இடமளிக்கபோவதில்லை- ஜனகன்
நாட்டுக்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன்மேல் அரசியல் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் வீரர்களைக் களங்கப்படுத்தும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள கருத்துகளை வன்மையானக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக யாரினது பெயரையும் குறிப்பிடாமல் குற்றம் சாட்டுவது, கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன் மேல் இருந்து கொண்டு அரசியல் செய்வதற்குச் சமனானது.
பொதுவாக, மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதில் சிறந்த வீரர் என்று கூற முடியும்.
எனவே, எங்களுடைய கிரிக்கெட் வீரர்களை களங்கப்படுத்திப்பேசி அரசியல் செய்வது மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கின்றது.
அத்துடன், களங்கப்படுத்திப் பேசுவது மாத்திரமன்றி அச்சுறுத்தல் மேற்கொள்ளவும் செய்கிறார். இன்று எங்களது சிறுபான்மை மக்களை மிரட்டும் தொனியில் பேசவும் ஆரம்பித்து விட்டார்.
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 10சதவீத முஸ்லிம்கள் மாத்திரம்தான் தங்களுக்கு வாக்களித்தார்கள் என்றும், இந்த முறை பொதுத்தேர்லில் 25 சதவீதம் வாக்களிக்காவிட்டால் அவர்கள் துன்பப்பட நேரிடும் என்ற அடிப்படையில் மஹிந்தானந்த தெளிவாக கூறியிருக்கின்றார்.
நாம் இவைகளை அவதானிக்கும்போது,அரசாங்கத் தரப்பில் இருக்கக் கூடிய ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் வீரமாக இந்த வசனத்தை மிரட்டும் தொனியில் கூறுகிறார் என்றால், அவருக்கு யார் இந்த தைரியத்தை கொடுத்தார் என்று நான் கேட்க விரும்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்போது இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், இலங்கை அணியினர் பணத்துக்காக கிண்ணத்தைத் தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை