படையினர் வசம் 2750 ஏக்கர் காணி; முகாம்களில் 409 குடும்பங்கள்- மணிவண்ணன் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் படையினர் வசம் 2750 ஏக்கர் காணி உள்ளமையால், அந்தக் காணிகளுக்குச் சொந்தமான 409 குடும்பங்கள் முகாம்களில் வாழ்ந்து வரும் அவலம் தொடர்ச்சியாக காணப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில், வி.மணிவண்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “இடைத்தங்கு முகாம்களில் வாழ்ந்து வரும் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக சண்டிலிப்பாய், உடுவில், பருத்தித்துறை, போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கு முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களே இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதாவது, யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் கூட படையினர் வசம் காணப்படுகின்ற 2750 ஏக்கர் காணிகளை மீள கையளிக்கவில்லை.
மேலும் கொரோனா அச்சுறுத்தலினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நாட்டு மக்களுக்கு சமூர்த்தி உள்ளிட்ட நிவாரண உதவிகளை அரசாங்கம் வழங்கியது.
ஆனால், குறித்த நிவாரண விடயத்திலும் அரசாங்கத்தினால் இந்த மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
இதேவேளை தமிழ் அரசியல் தலைமைகளும், அவர்களை மீள அமர்த்துவது தொடர்பான காத்திரமான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
எனவே தமிழ் மக்களின் வாழ்க்கைக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த உறுப்பினர்களை மாத்திரம் மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்
இதேவேளை 3000 இராணுவத்தை கொன்றதாக கருணா கூறுவது, குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டு அவருக்கு எதிரான நடவடிக்கையினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை