முகமாலை துப்பாக்கிச்சூடு – பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு வடக்கு ஆளுநர் உத்தரவு

முகமாலை காரைக்காடு குளப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பாக பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலும் தெரிவிக்கையில், “முகமாலை காரைக்காடு குளப்பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உட்பட அதனோடு ஒட்டியதாக நிகழ்ந்த விடயங்கள் தொடர்பாக அதிக கரிசனை கொண்டிருக்கின்றேன்.

அச்சம்பவம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

இந்நிலையில், நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக வடக்க மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளேன்.

அச்சம்பவம் தொடர்பாக பூரணமான விசாரணையை முன்னெடுத்து முழுமையான அறிக்கையொன்றை அளிக்குமாறும் கோரியுள்ளேன். அத்துடன் வடக்கு மாகாண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைதியை சீர்க்குலையக்கூடாது என்பதையும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.