பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் பாகிஸ்தானின் எச்சரிக்கை குறித்து தெரியாது – ருவான்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து ஒரு எச்சரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டப்படுவது குறித்து இலங்கைக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்ததாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர்ஜெனரல் மொஹமட் சாத் கட்டாக் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அந்த நேரத்தில் இலங்கை அரசாங்கத்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இருப்பினும், அப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த ருவான் விஜேவர்தன பாகிஸ்தானிடமிருந்து அத்தகைய எச்சரிக்கை கிடைத்தமை குறித்து தனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ருவான் விஜேவர்தன, இந்தியாவிடமிருந்து மாத்திரம் எங்களிற்கு எச்சரிக்கைகள் கிடைத்தன என்று குறிப்பிட்டுள்ளார்.
“2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து ஒரு எச்சரிக்கை குறித்து புலனாய்வு பிரிவு எனக்கு அறிவித்தது, ஆனால் பாகிஸ்தானில் இருந்து எந்த எச்சரிக்கையும் இலங்கைக்கு கிடைக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஹோட்டல்களையும் தேவாலயங்களையும் தாக்கும் சதி குறித்து உள்ளூர் புலனாய்வு அமைப்புகளில் இருந்து எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கூறியிருந்தனர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அன்று இலங்கையில் உள்ள பிரபல ஹோட்டல் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல த்தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட அதேவேளை 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை