சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை – தவராசா குற்றச்சாட்டு
சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது அசமந்தப் போக்காக இருந்துவிட்டு இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கின் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை காப்பாற்றத் தவறியது வடக்கு மாகாணசபையே என்றும் அவர் சாடியுள்ளார்.
அண்மையில் வடக்கிலும் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை அடையாளம் காண்பதற்கு செயலணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபஷவினால் கிழக்கு மாகாணத்திலுள்ள மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலணியின் உறுப்பினர் ஒருவர் கூறிய கருத்து தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்திலுள்ள மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலணியின் உறுப்பினர் ஒருவர் வடக்கு மாகாணத்திலும் அவ்வாறு ஒரு செயலணி உருவாக்கப்பட வேண்டும் என கூறியதைத் தொடர்ந்து ஏட்டிக்கு போட்டியாக இன்று பலர் அறிக்கைகள் விட்டவண்ணம் இருக்கின்றனர்.
ஆனாலும் குறித்த விடயம் தொடர்பாக எமக்கு இருக்கின்ற அதிகாரங்களை நாம் பயன்படுத்த தவறியதன் விளைவே இது என்பதனை அவ்வாறு அறிக்கைவிடும் தமிழ் அரசியல் வாதிகள் உணர்ந்து கொள்வார்களா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என நாடாளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தினால் அல்லது சட்டத்தின் கீழ் வெளிப்படுத்தப்பட்டவை தவிர, தொல்பொருள்சார் அமைவிடங்களும் புராதன விடயங்களும்” ஒருங்கிய நிரலுக்குரிய விடயமாக 13 வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருங்கிய நிரலிலுள்ள விடயங்களுக்கு மாகாணசபையினால் நியதிச் சட்டங்களை ஏற்படுத்த முடியும். அவ்வாறு நியதிச் சட்டங்கள் ஏற்படுத்தப்படும் போது நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அதன் அங்கீகாரத்தை பெற்றுத்தான் மாகாணசபை அங்கீகரித்தல் வேண்டும்.
சுற்றுலா விடயங்கள் ஒருங்கிய நிரலுக்குரிய விடயமாக 13 வதுதிருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும், எவ்விதத் தடைகளும் இல்லாமல் சுற்றுலா அதிகாரசபை நியதிச்சட்டம் வடக்கு மாகாணசபையால் நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டது. வடமேல் மாகாண சபை அதே வழிமுறையில் சுற்று சூழல் நியதிச்சட்டத்தினை 1990 ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தது.
அதேபோன்று தொல்பொருள் சார் விடயத்திற்கும், ஒருங்கிய நிரலில் கூறப்பட்டிருப்பதற்கு அமைவாக நியதிச் சட்டத்தை ஆக்குமாறு பலமுறை மாகாணசபையில் நான் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
எனது கோரிக்கைக்கு முதலமைச்சரோ அல்லது கூட்டமைப்பை பெரும்பான்மையாக கொண்ட மாகாணசபை உறுப்பினர்களோ அன்று முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை.
அவ்வாறு நியதி சட்டத்தை உருவாக்கியிருந்தால் அந்த நியதி சட்டத்தின் கீழ் மத்திய அரசினால் பிரகடனப்படுத்தப்படாத தொல்பொருள்சார் அமைவிடங்களையும் புராதன இடங்களையும் மாகாணசபையின் கீழ் பிரகடனப்படுத்தி அதன் பொறுப்பின் கீழ் கொண்டு வந்திருக்கலாம்.
அந்தவகையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதனை பாவிக்காது காலத்தினை கழித்துவிட்டு இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை” என்றும் சி.தவராசா சுட்டிக் காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை