யாழில். நட்சத்திர விடுதி அமைக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்!

அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டகள் உள்ளன  இடத்தில் அனுமதி கோரியவருக்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை சரணடைந்த விண்ணப்பதாரியை வரும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புலம்பெயர் தமிழர் ஒருவர் அரியாலை முள்ளியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்கவுள்ளார். அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவருக்கு சட்டத்தரணி ஊடாக தனது அங்கீகாரம் பெற்ற நபராக நியமித்திருந்தார்.

அந்த நபர் நட்சத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்காக உரிய திணைக்களங்களிடம் அனுமதி கோரியிருந்தார். அதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் நட்சத்திர விடுதி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆராய்ந்த தொல்பொருள் திணைக்களத்தினர், அங்கு மட்பாண்டங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவை அநுராதபுர கால மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புராதன சொத்துக்களை பராமரிக்கத் தவறியதாக தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நட்சத்திர விடுதி அமைக்கக் கோரியவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தொல்பொருள் திணைக்களத்தினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர், தனது சட்டத்தரணி ஊடாக நகர்த்தல் பத்திரம் அணைத்து யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் சரணடைந்தார்.

குறிப்பிட்ட இடத்தில் நட்சத்திர விடுதி அமைக்க வழங்கப்பட்ட அரச அனுமதிகள் தொடர்பான ஆவணங்களை எதிரியின் சட்டத்தரணி மன்றில் சமர்ப்பித்தார்.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்க முடியாத குற்றச்சாட்டு எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைத்த நீதிவான், அன்றைய தினம் வழக்காளிகளை மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.