தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கத்தை ஏற்படுத்த முயற்சி- மனோ காட்டம்!

முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து மனோ கணேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய மொழிப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஹேரத் நேற்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் செய்கிறார்கள் என்றும் இந்த குற்றச்சாட்டுக்களை உடனடியாக விசாரணை செய்யுமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் இன்று (வியாழக்கிழமை) அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆயிரத்து 300 இரண்டாம் மொழி பயிற்றுநர்களுக்கான நியமனங்கள், அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அலரி மாளிகையில் கடந்த ஜூலை 10ஆம் திகதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் அமைச்சரவைக்கு தன்னால் சமர்பிக்கப்பட்ட, அமைச்சரவைப் பத்திரத்துக்கு கிடைத்த ஒப்புதலின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாகவும் அன்றைய கல்வி அமைச்சரும், நிதி அமைச்சரும் விசேட ஒப்புதல்களை வழங்கியிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது அமைச்சின் கீழ்வந்த, தேசிய மொழி மற்றும் கல்வி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் தென்னக்கோன் மற்றும் இப்போது தன்மீது குற்றம் சுமத்தும் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஹேரத் ஆகியோரே அந்த நிகழ்வை அலரி மாளிகை மண்டபத்தில் நடத்தினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரசாத் ஹேரத் இல்லாத போது, இவரது அலுவலகத்துக்குச் சென்று, அவரது கையெழுத்தைத் தயாரித்து நியமனதாரிகளுக்கு பகிர்ந்தளித்தாக என்மீது குற்றம் சாட்டுவது அரசியல் காரணங்களுக்காக இட்டுக்கட்டிய பொய் என மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறிருக்கையில், தன்மீது அநியாய குற்றச்சாட்டுகளை ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சுமத்திவிட்டு, வெளியே வந்து ‘தமிழ் மக்களுக்காக முன்னிலையாவதாகக் கூறி அமைச்சர் மனோ கணேசன் இனவாத செயல்களையே முன்னெடுத்தார்’ எனக் கூறியதன் மூலம் பிரசாத் ஹேரத்தின் உண்மையான நோக்கம் என்னவென்பதை தெளிவுபடுத்தியுள்ளார் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.