நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை – சி.வி.விக்னேஸ்வரன்!

நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சில கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை.

ஏற்கனவே துண்டு துண்டாக இருக்கும் இடங்களின் தன்மைக்கேற்ப, வரலாற்றுக்கு ஏற்ப, தனித்தன்மைக்கேற்ப, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுமிடங்களில் அவர்கள் தம்மைத்தாமே ஆளவே நாங்கள் கேட்கின்றோம்.

அது தவறா? ஒரே நாட்டினுள் நாம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் நாங்கள் எம்மை நாமே ஆள உரித்தில்லை என்றால் உங்கள் சிங்கள இராணுவத்தைக் கொண்டு எம்மை என்றென்றும் அடிமைகளாக வாழவைக்க வழி தேடுகின்றீர்களா?

இவ்வாறான பிழையான கருத்துக்களை சிங்கள அரசியல்வாதிகள் கூறிவந்தமையால்த்தான் சிங்கள மக்கள் உண்மை அறியாது தமிழர்கள் மீது வன்மமும், குரோதமும், வெறுப்பும் கொண்டார்கள்.

தொடர்ந்து சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற இவ்வாறான சில்லறைக் கருத்துக்களைக் கூறி நாட்டின் சகோதர இனங்களிடையே மீண்டும் கலவரங்கள் வராமல் பிரதமர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரதமரின் சகோதரர் ஒருவரின் வீடு பிரதமர் வீட்டிற்கு அருகாமையில் பாரம்பரிய தந்தை வழிக் காணியில் இருந்தால் ‘இது எனது தந்தை வழிக்காணி! என் சகோதரரின் படுக்கை அறைக்குள் எந்த நேரமும் நான் போகலாம்’ என்று அவர் வாதிட முடியுமா? சகோதரர் அனுமதி அளித்தால்த்தான் அவர் அங்கு செல்லலாம்.

அதே போல் பாரம்பரியமாக தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கினுள், சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் சிங்கள மக்கள் குடிகொள்ளவும் வணிகத்தலங்களை ஏற்படுத்தவும் இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருக்கவும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களிடம் அனுமதிபெற வேண்டும்.

அப்படி இல்லை என்றால் இந்த நாட்டின் ஜனநாயகம் சிங்களவரால், சிங்களவருக்கு, சிங்களவர் நடத்தும் அரசாங்கம் என்று பொருள் பட்டுவிடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.