நீதியை தேவைக்கேற்ப வாங்க முடியுமாக இருந்தால் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம்: சுரேஷ் கேள்வி

தேவைக்கேற்ப நீதியை அரசாங்கத்தினால் வாங்க முடியுமாக இருந்தால் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகின்றீர்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணா அம்மான்  வெளியிட்ட கருத்து தொடர்பாக அரசாங்கத்தை சார்ந்த சிலர் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே அவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருணா அம்மான், தான் கொரோனா வைரஸை விட பயங்கரமானவன்; ஆனையிறவு போன்ற தாக்குதல்களில் 3000க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை கொலை செய்தேன் என பெருமையாக கூறி இருந்தார்.

இந்நிலையில் அவரின் கருத்துக்கு தென்னிலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள், பௌத்த அமைப்புகள் ஆகியன தங்களது எதிர்ப்பை வெளியிட்டதுடன், கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனாலும் அரசாங்கத்தை சார்ந்தவர்கள் கருணாவுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டனர்.

அதாவது, யுத்தத்தின்போது கருணா வழங்கிய தகவலின் ஊடாகவே புலிகளை முழுமையாக அழிக்க முடிந்ததென அரசாங்கத்தை சார்ந்த பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

அத்துடன் மஹிந்தவின் ஆட்சி காலத்தில் பிரதி அமைச்சராக கருணாவுக்கு பதவி வழங்கப்பட்டிருந்தது. அது மாத்திரமல்ல, விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்துவந்த கே.பி. என்பவருக்கும் தேவைக்கு மேலதிகமாக சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டு, அவரும் இன்றுவரை அரசினால்  பாதுகாக்கப்பட்டு  வருகின்றார்.

இவ்வாறு தங்களது தேவைகளுக்கு ஏற்ப நீதியை மாற்றிக்கொள்ள முடியுமாக இருந்தால், சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகின்றீர்கள்?

‘சிலர் பாரதூரமான குற்றங்களை செய்திருக்கிறார்கள்; அவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோரைப் பற்றி சட்டமா அதிபர் திணைக்களம் ஒப்புதல் தரவேண்டும்’ போன்ற பல பொய்யான காரணங்களை கடந்த பத்து வருடங்களாக கூறி வருகின்றீர்கள்.

ஆனால் சிறையில் இருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும் 15 வருடத்துக்கு மேல் சிறையில் வாடுகின்றனர். இவர்கள் யாரும் தாமாக விரும்பி வன்முறையில் ஈடுபட்டவர்களல்ல. அவர்களை வழிநடத்தியவர்களின் உத்தரவுகளை செயற்படுத்தியவர்களே அவர்கள்.

உங்கள் பார்வையில் அவர்கள் குற்றமிழைத்ததாக கருதப்பட்டாலும் தமது மக்களின் உரிமைகளுக்காகவே செயற்பட்டனர்.

ஆகவே, விடுதலைப் புலிகளின் தளதிகளை பாதுகாத்து அவர்களுக்காக  குரல் கொடுக்கும் அரசு, மரண தண்டணை நிறைவேற்றப்பட்ட இராணுவத்துக்கு பொது மன்னிப்பளித்த அரசு, 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் இந்த அரசியல் கைதிகளை தொடர்ந்தும் கால இழுத்தடிப்பு செய்யாமல் விடுதலை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.