நாளைய ஆட்சி இதைவிட கொடூரமானதாக இருக்கும்: வலுவான எதிர்க்கட்சி தேவை- சந்திரசேகர்

இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்நிலையில், நாளைய ஆட்சி இதைவிட மிகக் கொடூரமானதாக இருக்கும் என்றும் அராஜகத்தில் பயணிக்கும் அரசாங்கத்தை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதேஅவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தீர்மானிக்கும் சக்தியாக உருவாகும். அதற்கு யாழ்ப்பாண மக்களும் எமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகின்றோம்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எமது வேட்பாளர்கள் யாழ். மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடியவர்கள். ஏனைய கட்சிகள் போன்று பணத்திற்காகவும் , பதவிக்காகவும் போட்டியிடவில்லை. தொண்டர் அடிப்படையில் மக்களுக்காக சேவை செய்யக் கூடியவர்கள்.

இதேவேளை, இந்த அரசாங்கம் கொரோனாவை காரணம்காட்டி மக்களை மிக மோசமாக வதைக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது. நாளைய ஆட்சி இதைவிட மிகக் கொடூரமானதாக இருக்கும்.

அராஜகத்தில் பயணிக்கும் அரசாங்கத்தை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி தேவை என்பதுடன் முதுகெலும்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவை.

இதேவேளை, நாடு கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. 13 ரில்லியன் கடன் உள்ளது. ஆனால் நாட்டின் சொத்து மதிப்பு 1.6 ரில்லியனே. அப்படியாயின் மிச்சமெல்லாம் தண்ணீரில்அடித்துச் செல்லப்பட்டுள்ளனவா?

நாட்டில் பிறக்கும் பிள்ளை, 6 இலட்சம் ரூபாய் கடன்கார பிள்ளையாகவே பிறக்கின்றது. ஆனால் ஆள்பவர்கள் தங்களை குபேரன்களாக ஆக்கிக்கொண்டனர்.

இதனிடையே, ராஜபக்ஷக்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யப்போவதில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்தைத் தொடர்ந்து வளர்க்கவே முயல்வார்கள். இதனை தமிழ் மக்கள் புரிந்துகொண்டு ராஜபக்ஷக்களை புறக்கணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.