எம்.சி.சி.உடன்படிக்கை: மைத்திரி- ரணிலே பொறுப்பு கூற வேண்டும்- ரோஹித

எம்.சி.சி.உடன்படிக்கையில் முதற்கட்டமாக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் நிதி தொடர்பாக மைத்திரி- ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எம்.சி.சி.உடன்படிக்கை குறித்து ஆராய்ந்த மீளாய்வு குழுவினர், அதன் இறுதியறிக்கையை தற்போது ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தையும் மக்களிடம் மறைக்காமல் கூறுமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் எம்.சி.சி.உடன்படிக்கையில் முதல் கட்டமாக 7.4 மில்லியன் அமெரிக்க டொலரும், 2ஆம் கட்டமாக 2.6 மில்லியன் அமெரிக்க டொலரும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

எனினும் கிடைக்கப்பெற்ற நிதி தொடர்பாக எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஆய்வு குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த அரசாங்கம் எம்.சி.சி.உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்திலோ வெளியிலோ பகிரங்கப்படுத்தாமல் இரகசியமான முறையிலேயே கையாண்டு வந்துள்ளது.

அதாவது காணி அபிவிருத்தி மற்றும் காணி அளவீடு ஆகிய இரண்டு விடயங்களை உள்ளடக்கிய உடன்படிக்கை என்றே பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம்  இணக்கம் தெரிவித்த விடயங்கள் என்ன என்பது தொடர்பாகவும் 10 மில்லியன் நிதிக்கு என்ன நடந்தது  என்பது தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே இந்த விடயங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே உரிய  பதிலை வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.