தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்- வேட்பாளர் கணேஸ்வரன்

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாங்கள் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, மாயவனூர் பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிடுகையில், “எமக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவை எவற்றையும் எமது தமிழ் அரசியல்வாதிகள் பார்ப்பதில்லை. அவர்கள் தமிழ் என்ற மாயையை மாத்திரம் காட்டி தமிழருக்கு உரிமை வேண்டும் என, கடந்த 75 வருடங்களாக இதனையே கூறிக்கொண்டு வருகின்றனர்.

நாங்கள் கடந்த முப்பது வருடங்களாக முப்படை வைத்துப் போராடினோம். அதன்மூலம் கிடைக்காத ஒன்றை இவர்கள் திரும்பவும் ஐக்கிய நாடுகள், சர்வதேச நாடுகளின் மூலம் பெறப்போகிறோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால், இந்த ஐக்கிய நாடுகள், சர்வதேச நாடுகள் எல்லாம் 2009 ஆம் ஆண்டு எமது மக்கள் கொத்துக் கொத்தாய் அழியும்போது வரவில்லை. இப்போது எப்படி வருவார்கள். அவர்கள் வருவார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் மாயைக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

உரிமை என்று கதைப்பவர்கள் எவருக்கும் இயக்கத்துடன் தொடர்பில்லை. இவர்கள் எவருமே ஆயுதம் ஏந்தவில்லை. இவர்களின் கதையை இப்போது கேட்டால் மீண்டும் எமது பிள்ளைகளை வைத்து இயக்கம் ஆரம்பிப்பது போலவே இருக்கின்றது” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.