அம்பாறையில் ஆரம்பமானது கருணாவின் தேர்தல் பிரசாரம்
தமிழர் மகாசபை சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான், தனது தேர்தல் பிரசாரத்தை அம்பாறையில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம்- கல்முனை, அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் தேங்காய் உடைத்த பின்னர் தனது பிரசாரத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றில், தான் தெரிவித்த தேர்தல் பிரசார கருத்து தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்கிய பின்னர் மீண்டும் தனது பிரசார பணியினை முன்னெடுப்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.
இவ்வாறு வருகை தந்த கருணா அம்மானை, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து கல்முனையில் அமைந்துள்ள அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்ற கருணா அம்மான், பூசையில் ஈடுபட்டு தனது முதற் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
மேலும் பாண்டிருப்பு சந்தை, தாளவட்டுவான் சந்தி, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கருணா அம்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான துண்டுப்பிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை