தமிழ் தலைமைகள் தீர்வு பெற்றுதருவதாக நாடாளுமன்றம் சென்று தூங்கியதே வரலாறு – கோபிநாத்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதாக கூறி கடந்த காலங்களில் அவர்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்ற சென்றவர்கள், அங்கு தூங்கியது மாத்திரமே வரலாறு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கணேசமூர்த்தி கோபிநாத் மேலும் கூறியுள்ளதாவது, “நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் ஒரு வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்.

மேலும் இதுவரையான காலமும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் நல்லிணக்க மற்றும் இந்தக் கலாச்சார அமைச்சில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்தேன்.

அந்தவகையில் கடந்த காலங்களில் எமது பகுதிகளில் நிலவிய குறைபாடுகளை இனங்கண்டு அவைகளை முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு கொண்டுச் சென்று, தீர்வை பெற்றுக்கொடுத்து இருக்கின்றேன்.

இந்நிலையிலேயே தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, நடைபெறவுள்ள தேர்தலில் தங்களது கட்சி சார்பாக போட்டியிடுமாறு வேண்டுகோள் விடுத்தது.

அதற்கமையவே எனது உதவிக்கல்விப் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதுடன் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க எண்ணியே பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

கடந்த காலங்களில் இவர்கள் எங்கிருந்தார்கள் என்பதே தற்போது மக்களின் கேள்வியாக இருக்கின்றது.

நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை. அரசியலுக்கு வருவது அரசியலில் இருந்து விடுபடுவது அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து அதேபோன்று அவர்களுக்கு வாக்களிப்பதும் வாக்களிக்காமல் விடுவதும் மக்களின் விருப்பமே ஆகும்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்கைப் பெற்று குறைந்தது மூன்று பேர் நாடாளுமன்றம் செல்கின்றார்கள்.

இவர்களுக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது. இவ்வாறு அதிகாரத்தை பெற்றுக்கொள்பவர்கள் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்காமல் தூங்கினால், அவரை நம்பியுள்ள முழு சமூகமும் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.