யுத்தத்திற்கு பின்னர் வெளிநாட்டு சக்திகள் தலையிட்டன – பிரதமர் மஹிந்த
2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போரில் இலங்கை வெற்றிபெற்றதன் பின்னர் தான் தோல்வியடைந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் கூட வெளிநாட்டு சக்திகள் தலையிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதிகளை தோற்கடிப்பது என்ற தலைப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் கருத்து தெரிவித்திருந்த அவர் இலங்கைக்கு எதிரான உள்நாட்டு, சர்வதேச சதி திட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
“1970 ல் ஒரு சோசலிச அரசாங்கம் இலங்கையில் ஆட்சியைப் பிடித்தபோது, ரஷ்ய அல்லது சீன தலையீட்டின் மூலம் அது ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டதாக யாரும் கூறவில்லை. அதேபோல், ஒரு முதலாளித்துவ அரசாங்கம் 1977 இல் ஆட்சியைப் பிடித்தது, ஆனால் அது அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் தலையீட்டின் மூலம் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டதாக யாரும் கூறவில்லை.
எவ்வாறாயினும், 2015 ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் இதற்கு முன் அனுபவிக்காத அளவிற்கு வெளிநாட்டு தலையீடு இருந்தது குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் போட்டியிட தீர்மானித்திருந்த நிலையில் அதனை மாற்றி பொது வேட்பாளர் நிறுத்தவைக்கப்பட்டதன் பின்புலத்தில் யார் இருந்தார்கள்.
2009 ல் நாங்கள் போரை வெற்றிகொண்ட பின்னர் சில வெளிநாட்டு சக்திகள் இந்த நாட்டின் அரசியலில் ஒரு முக்கிய வழியில் தலையிடத் தொடங்கின. அந்தப் போரை எங்களால் வெல்ல முடியும் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை.
இந்த தலையீடு உண்மையில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் தொடங்கியது, ஆனால் இந்த நாட்டு மக்கள் அந்த ஆரம்ப முயற்சியை உறுதியாக தோற்கடித்தனர். எவ்வாறாயினும், சதி 2015 வரை தொடர்ந்தது.
மேலும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு துறையினர் மற்றும் முப்படையினர் என பலர் கைது செய்யப்பட்டு, வாரங்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர், மேலும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த நாட்டில் உள்ள தேசியவாத முகாமை முற்றிலுமாக அழித்து, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் பிளவுக்கு வழிகோலும் நோக்கத்துடன் இவை அனைத்தும் செய்யப்பட்டன. குறிப்பாக போரின் மூலம் அவர்களால் சாதிக்க முடியாதவை, அரசியல் சூழ்ச்சிகள் மூலம் சாதிக்க முயன்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபின் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பிரச்சினையாக கொரோனா வைரஸ் தொற்றை நாம் வெற்றிகராமாக எதிர்கொண்டோம்.
குறித்த வைரஸினால் உலகளவில் பலர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்து வந்த நிலையில் இலங்கை அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டது. குறிப்பாக நியூஸிலாந்தை விட கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதில் இலங்கை உலகில் முதலிடத்தில் உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்துக்களேதுமில்லை