மீண்டும் ரன்ஜித் ஆண்டகை தொடர்பாக கருத்து வெளியிட்டார் ஹரின்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தனது கருத்துக்கள், அரசியல் ரீதியாக ஒரு தரப்புக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை, தன்னிடம் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பு பேராயர் தொடர்பாக ஹரின் பெர்ணான்டோ தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் சஜித் பிரேமதாஸவுடன் சென்று பேராயரை சந்தித்தார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். ஹரின் பெர்னாண்டோ மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பு பேராயர் தொடர்பாக நான் வெளியிட்ட கருத்துக்களுக்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், நான் பொய் எதனையும் கூறவில்லை.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, எனது கருத்து தொடர்பாக ஏனைய கத்தோலிக்க வேட்பாளர்களுக்கு பிரச்சினைகள் வரும் என்று கருதியே, என்னை பேராயரிடம் அழைத்துச் சென்றார். நான் அவரது கருத்தை ஏற்றுக் கொண்டேன். ஒரு தலைவராக அல்லாது எனது சகோதரனாக அவரை எண்ணியே நான் இதனை ஏற்றேன்.
நாம் இந்த தலைவருடன் எதிர்க்காலத்தில் தொடர்ந்தும் பயணிப்போம். நான் பேராயரை சந்தித்தபோது, எனது தரப்பு நியாயத்தை கூறினேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். அத்தோடு, தனது சில கருத்துக்கள் அரசியலில் ஒரு தரப்புக்கு சார்பாகவும் இன்னொரு தரப்புக்கு பாதகமாகவும் மாறியதையும் அவர் கூறினார்.
எனது குடும்பத்திற்கு இதனால், ஏற்பட்ட பிரச்சினைகளை எண்ணி அவர் கவலையடைந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை