20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி

காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள்    என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்  தெரிவிக்கையில், ”நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை இலக்கத்திலேயே ஆசனங்களை கைப்பற்றும். ஏனெனில் தமிழ் மக்கள் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கிய ஆணையினை வீணடித்து விட்டார்கள்.

இரண்டு பேரினவாதக் கட்சிகள் இணைந்து ஏற்படுத்திய அரசாங்கத்திற்கு ஆதரவளித்த கூட்டமைப்பு தமிழர்களுக்காகச் செய்தவற்றை அவர்களால் முடிந்தால் கூறட்டும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவளித்து அரசாங்கத்தினைக் கைப்பற்றிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலையைக் கூட ஏற்படுத்த முடியாது போனது.

இதனைவிடுத்து சுயேட்சைக்கட்சிகளைக் குறித்து சுமந்திரனும் சம்பந்தனும் கருத்துக் கூறிவருகின்றனர். ஆனால் இம்முறை அவர்களால் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். ஆகக் கூடியது ஒன்பது ஆசனங்களையே பெற முடியும். வெறுமனே 20 ஆசனங்களைப் பெறமுடியுமென பகல் கனவு காண வேண்டாம். அவர்களால் பெறவும் முடியாது.

அவர்களது அனைத்து ஏமாற்று வேலைகளுக்கும் ஓகஸ்ட் மாதம் பதில் கிடைத்துவிடும். கூட்டமைப்பினது உறுப்பினர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவே அரசுடன் இணைந்து அரசியல் செய்கின்றனர் என மக்களுக்குத் தெரியும்.

காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள்” என   எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.