ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் 125 பேருக்கு தொடர்பு: அம்பலமாகியது இரகசிய கடிதம்

ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகியிருந்த  பாதுகாப்பு பிரிவில்  பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர்  எஸ்.ஜி.சதரசிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலத்தில் அரச உளவுச் சேவை பணிப்பாளராக செயற்பட்ட  நிலந்த ஜயவர்தன, கடந்த 2019 ஏப்ரல் 10ஆம் திகதி, மட்டக்களப்பு பகுதியில் பாதுகாப்பு மதிப்பீட்டைக் கூறி ஒரு இரகசிய கடிதத்தை  அனுப்பியிருந்தார்.

குறித்த இரகசிய கடிதத்தில் இதுவரை ஜனாதிபதிக்கு தெளிவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஐ.எஸ்.அமைப்பினை பின்பற்றுபவர்கள் அந்த பகுதிக்குள் இருப்பதால் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அந்த இரகசிய கடிதத்தில், அரச உளவுச் சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

எனவே, தீவிரவாத  நடவடிக்கைகளை முன்னெடுக்க இப்பகுதியில் வாய்ப்புக்கள் உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதேவேளை சுதந்திர தினத்திற்கு முந்தைய தினம் இடம்பெற்ற  மதிப்பீட்டுக் கூட்டத்திற்காக, அரச உளவுச் சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லலித் நாணயக்கார வந்திருந்தார். அதன்போது இலங்கையில் ஐ.எஸ். உடன் 125 பேர் இணைந்திருப்பதாகவும் அவர்களில் இருவர் ஏற்கனவே வெல்லம்பிட்டி மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் வசித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் ஈராக் மற்றும் ஈரானில் ஐ.எஸ் தோல்வியடைந்த பின்னர் அவர்கள்ஏனைய நாடுகளைத் தாக்க திட்டமிட்டுள்ளனரென லலித் நாணயக்காரா குறிப்பிட்டிருந்தார்” என உதவி பொலிஸ் அத்தியட்சர்  எஸ்.ஜி.சதரசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.