கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுப்பது ஆரோக்கியமற்றது – தபேந்திரன்
கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுக்கலாம் என நினைப்பது அரசியல் ஆரோக்கியமற்றது. அதனை விடுத்து நாம் என்ன செய்ய போகின்றோம் என மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அரசியலை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான வேதநாயகம் தபேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ”எனது அரசியல் பிரவேசமானது திடீரென ஏற்பட்டது. எனது தந்தை உட்பட குடும்பத்தினர் தொழிற்சங்கள் , அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள். இந்த நிலையில் புதுமுக வேட்பாளராக தமிழ் அரசுக் கட்சி என்னை நாடாளுமன்ற தேர்தலில் களமிளக்கியுள்ளனர்.
எனது தந்தை காலமாகும் வரை அரசியல் ஈடுபாட்டிலிருத்தார். அவர் காலமாகும் தருவாயில் ‘ நீ அரசியலில் ஈடுபட விரும்பின் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்தே ஈடுபட வேண்டும் ‘ என என்னை வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையிலையே நானும் தேர்தலில் போட்டியிட சம்மதித்தேன்.
நான் எழுத்துறை சாரந்தவன் எனும் வகையில் நாம் அனுபவித்த ஊரடங்கு , சோதனை சாவடிகள் , ஹர்த்தால்கள் என்பவை தொடர்பில் 14 ஆக்கங்களை சிங்கள மொழியில் மொழி பெயர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றேன். எமது கஷ்டங்கள் , பிரச்சனைகளை சிங்கள மக்களுக்கு எடுத்து செல்லவுள்ளேன்.
எனது இலக்கு அடித்தட்டு மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தி , அபிவிருத்தியை முன்னெடுத்து செல்வதுடன் , சிங்கள மக்களிடமிருந்து கௌரவமான தமிழ் தேசிய தீர்வை பெற்றுக்கொள்வதாகும்.
தமிழ் மக்கள் மத்தியில் பொருளாதாரம் வீழ்ந்து கிடக்க காரணம் சந்தை தோல்வியாகும். அவர்களுக்கு உரிய தொழிற் பயிற்சி இல்லாமையும், குழு வேலைத்திட்டங்களில் ஒற்றுமையின்மை காரணமாக தோல்விகளை சந்திக்கின்றனர்.
அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி , அவர்களுக்கான திட்டங்களையும் அறிவுகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்க உள்ளோம். இதனூடாக சந்தை தோல்விகளில் இருந்து மக்களை மீட்க முடியும்.
போட்டி கட்சிகள் தாம் என்ன செய்ய போகின்றோம். என சொல்லாது கட்சிகளை விமர்சித்து தமது அரசியலை முன்னெடுத்து செல்கின்றனர் இது ஆரோக்கியமானதில்லை. அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை