தேர்தல் பிரசாரங்களில் எனது ஒளிப்படத்தை பயன்படுத்தக் கூடாது – ஜனாதிபதி உத்தரவு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது ஒளிப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பாதுகாப்பு சேவைகள், பொது நிர்வாகம், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி பணித்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் தமது பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் ஒளிப்படங்களை பயன்படுத்துவதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இராணுவம் மற்றும் அரச அதிகாரிகளை சம்பந்தப்படுத்தி பல்வேறு நியமனங்களை பெற்றுத் தருவதாக குறிப்பிடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து, பீ.பி.ஜயசுந்தர அனைத்து ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய துறைத் தலைவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் அனைத்து அரச ஊழியர்களும் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுமாறும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன் பிரதியொன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை