பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் தவறியுள்ளது- கிளிநொச்சியில் சஜித் குற்றச்சாட்டு

கொரோனாவினால் பின்னடைவை சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பாமல் அரசாங்கம் தான்தோன்றிதனமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கிளிநொச்சியிலுள்ள 4 பிரதேச செயலகங்கள் உள்ளடங்களாக 397 கிராமங்களில் இருந்து வருகைதந்துள்ள இந்த மக்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அத்துடன் கடற்றொழிலை நம்பி வாழ்பவர்களே இங்கு பெரும்பாலானோர் இருக்கின்றார்கள். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தங்களது அன்றாட செயற்பாடுகளைமுன்னெடுத்து செல்கின்றனர்.

எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்ந்த நிலைமைக்கு கொண்டுச்செல்லும் வகையில் சிறந்த திட்டங்களை நிச்சயம் நான் முன்னெடுப்பேன்.

எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் பதவியில் இருந்த வேளை வீட்டுத்திட்டங்களை அமைத்துக்கொடுத்தேன்.

என்னை வெற்றியடைய செய்தால் எதிர்வரும் காலங்களிலும் காணி மற்றும் வீடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை வழங்க செயற்றிட்டங்களை நிச்சயம் முன்னெடுப்பேன்.

மேலும் கிளிநொச்சி- யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு எமது கட்சியை சார்ந்தவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, அதனூடாக தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.

கிளிநொச்சியில் 95 கிராம சேவகர் பிரிவில் 397 கிராமங்கள் உள்ளன. இவைகளுக்கு சிறந்த அபிவிருத்திகளை முன்னெடுப்பேன்.

அத்துடன் தொழிலற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவை வறுமைக்கோட்டிலுள்ள அனைத்து மக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் வழங்குவேன்.

அந்தவகையில் எதிர்வரும் 5 ஆம் திகதி வெற்றியடைந்ததன் பின்னர் பல மாதிரி கிராமங்களை உருவாக்கி வறுமைக்கோட்டிலுள்ள அனைத்து மக்களினது வாழ்க்கையும் மேலும் மேன்மையடைய செய்வேன். இங்குள்ள 397 கிராமங்களையும் நான் பொறுப்பேற்பேன்.

இதேவேளை மக்களுக்கு சேவை செய்ய தெரியாத அரசாங்கமே தற்போது நாட்டில் காணப்படுகின்றது.

மேலும் 2011 ஆம் ஆண்டு உலககிண்ண ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக இலங்கையின் சிறந்த வீரர்களான மஹேல ஜெயவர்தன,  குமார் சங்ககார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் தற்போதைய அரசாங்கத்தினால் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள்.

இந்த வீரர்கள், நாட்டை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். ஆனால் தற்போதைய அரசாங்கம் அவர்களின் கௌரவத்தை பாதிக்கும் வகையில் செயற்படுகின்றது. ஆகவே நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் கௌரவத்தை பாதுகாப்போம்.

அத்துடன் அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பாக சிந்திக்காமல் வீணாக இந்த விவகாரத்தில் நேரத்தை செலவிடுகிறது.

ஆகவே, நாம் பொதுத்தேர்தலில் வெற்றியடைந்தன் பின்னர், முதலில் நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பாகவே அதிக கவனம் செலுத்த இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.