வெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்
கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் நிற்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “தேர்தல் காலங்களில் ஒன்றைக் கூறிவிட்டு அதற்கு எதிராக செயற்பட்டதன் காரணத்தினாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்காமல் வெளியேறினோம்.
கடந்த அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை கூட்டமைப்பு வழங்கியதன் மூலம் இன்று கலப்பு விசாரணையும் இல்லை, சர்வதேச விசாரணையும் இல்லை. உள்ளக விசாரணை என எதுவுமே இல்லாமல் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது. இன்று அது தமிழ் மக்களை எங்கு நிறுத்தியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்த விடயம்.
கிடைத்த சந்தர்ப்பங்களை மக்களுக்காகப் பயன்படுத்தாமல் சுய இலாப அரசியலுக்காக கூட்டமைப்பின் பெயரால் ஒரு சிலர் எடுத்துகொண்டதற்கான முடிவுதான் இது. இன்று கூட்டமைப்பினர் யானை உண்ட விளாம்பழமாக வெறும் கோதாக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.
இதேவேளை, கூட்டமைப்பிற்குள் இருக்கும் குறைபாடுகளைத் திருத்தி நேர்வழியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக பல முயற்சிகளை நாம் எடுத்தோம். அது முடியவில்லை. எனினும் அதற்காக நாம் ஒதுங்கியிருக்க முடியாது” என்று தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை