கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது
கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருடன் ஆசிரியர் ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணை, குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடைய பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “ இயக்கச்சி பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று நேற்று முன்தினம் பதிவாகி இருந்தது.
இந்த சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியை சுற்றி, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது பிளாஸ்ரிக் செய்யப்பட்ட குண்டு 2, கரும்புலி நாள் பதாதை 1,தொலைபேசி 1, மடிக்கணணி 1, டொங்குள் 1, இருவெட்டு1 ஆகியவைகளை அவர்கள் மீட்டுள்ளனர்.
மேலும் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருடன் கைது செய்யப்பட்ட ஆசிரியையான குறித்த பெண், சட்ட ரீதியற்ற முறையில் திருமண வாழ்க்கையை முன்னெடுத்து வந்துள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சம்பவத்தில் படுகாயமடைந்தவர், முன்னாள் போராளி என்றும் அவர் ஜனநாயக போராளிகள் கட்சியின் அங்கத்தவராக செயற்பட்டு வந்துள்ளாரென்றும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடைய பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குறித்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றத் தடுப்பு பிரிவு, பொலிஸார், புலனாய்வு பிரிவு ஆகியன தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
கருத்துக்களேதுமில்லை