யாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், “இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 2019ஆம் ஆண்டுக்குரிய தேர்தல் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது. 2019 தேர்தல் இடாப்பில் பெயர் உள்ளவர்கள் இம்முமுறை தேர்தலில் வாக்களிப்பதற்கு உரிமை உள்ளவர்கள்.
அதேபோல், தேர்தலில் வாக்களிப்பதற்கு சமூகமளிக்கும் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளத்தைச் சமர்ப்பித்து வாக்களிக்க முடியும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளமாக அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதி பத்திரம், கடவுச்சீட்டு மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் மதகுருமாருக்கு என வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமூக சேவை திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற முதியோர் அடையாள அட்டை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படும்.
இத்தகைய எந்தவொரு ஆவணமும் இல்லாத ஒருவர் தற்காலிகமாக தேர்தல் திணைக்களத்தினால் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.
ஜூலை மாதம் 17ஆம் தகதி வரைக்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தினுடைய தரவுத்தளத்திலுள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக உட்சேர்க்கப்பட்ட சகல தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரர்களுக்கும் அடையாள அட்டையினை தேர்தலுக்கு முன்னர் விநியோகிப்பதற்கு உரிய விசேட நடவடிக்கையினை ஆட்பதிவுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
அதேபோல், 2020 ஜூலை மாதம் 29ஆம் திகதி வரைக்கும் ஆட்பதிவுத் திணைக்கள தரவுத்தளத்தில் உட்சேர்க்கப்படுகின்ற தகவல்களைக் கொண்டு உறுதிப்படுத்திய கடிதத்தினை தேர்தலுக்கு முன்னர் விநியோகிப்பதற்கும் ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே தேசிய அடையாள அட்டை இல்லாத அனைத்து வாக்காளர்களும் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதிக்கு முன்னர் அடையாள அட்டைக்குரிய விண்ணப்பத்தினை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பி தங்களுக்குரிய ஆள் அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பாக சகல கிராம சேவையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலகுவாக வாக்காளர்கள் வாக்களிப்பினை மேற்கொள்ள நாம் முயற்சிக்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை