ஹம்பாந்தோட்டையைப் போன்று குருநாகல் அப்பாவி மக்களையும் பலிக்கடாவாக்க முயற்சி- அசாத் சாலி

ஹம்பாந்தோட்டை மக்களை ஏமாற்றியது போல், குருநாகல் மாவட்ட மக்களையும் வாக்குகளுக்காக இப்போது ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “ஹம்பாந்தோட்டையில் கப்பல் வராத துறைமுகம், விமானம் தரையிறங்காத விமான நிலையம், கிரிக்கெட் விளையாட முடியாத சூரியவெவ கிரிக்கெட் மைதானம், கூட்டங்கள் நடத்த முடியாத மாநாட்டு மண்டபங்கள் ஆகியவற்றை அமைத்து அவர்களை முட்டாளாக்கியது போன்று இப்போது குருநாகல் மாவட்ட மக்களையும் பொய்களைக் கூறி ஏமாற்றத் தொடங்கியுள்ளனர்.

மஹிந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நல்லாட்சி அரசாங்கம் விற்றுவிட்டதாகவும், விற்ற பணம் எங்கே இருக்கின்றதென்று கூட தெரியாதென்றும் பிரதமர் தேர்தல் மேடைகளில் கூறிவருகின்றார்.

நிதி அமைச்சராக இருக்கும் பிரதமர், பொறுப்பில்லாமல் இவ்வாறு கூற முடியுமா? அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது? அல்லது நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களிடமா இந்தப் பணம் இருக்கின்றது என குறிப்பிட்டுச் சொல்லாமல் வெறுமனே வாக்குக் கேட்பதற்காக இவ்வாறான கதைகளை கதைக்கக் கூடாது.

இவர்கள் ஏமாற்றுவதிலே அசகாயசூரர்கள். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்கு 1.3 பில்லியன் டொலர் மதிப்பிடப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பத்தாயிரம் கப்பல் வரையில் துறைமுகத்துக்கு வருமெனவும் கூறப்பட்டது. 99 வருடக் குத்தகையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

எனினும், துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது மாதத்தில் 37 கப்பல்கள் மாத்திரமே ஹம்பாந்தோட்டைக்கு வந்தன. இதுதான் அப்போதைய அரசாங்கத்தின் செயற்பாடு.

ஆனால், நல்லாட்சி வந்த பிறகு, சீன துறைமுக கம்பனியொன்றுடன் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, 70 வருட குத்தகையுடன் 1.4 பில்லியன் பெறப்பட்டு, பழைய கடன்கள் அடைக்கப்பட்டன.

சீன துறைமுக கம்பனிக்கும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தில், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 15% சதவீத நிலையான பங்குகளும் இருந்தன. எனவே, நல்லாட்சி அரசாங்கம் எதையுமே விற்கவில்லை. இந்தத் துறைமுகம் கூட 70 வருடத்துக்குப் பிறகு, நமது நாட்டுக்குச் சொந்தமாகும்.

மஹிந்த அரசாங்கம்தான் காலி முகத்திடல் காணியை ஷங்ரில்லா ஹோட்டலுக்கு விற்றார்கள். காலி முகத்தின் உப்புநீரை சீனாவுக்கு விற்று, துறைமுக நகரத்தை உருவாக்கினார்கள். இப்போது, ஷங்ரில்லாவுக்கு பின்புறம் உள்ள காணியை துப்பரவாக்கி, வெளிநாட்டுக் கம்பனி ஒன்றுக்கு தாரைவார்த்துள்ளார்கள்.

இலங்கையின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்கு தள்ளியவர்கள் நல்லாட்சி அரசாங்கம் பற்றி விமர்சிக்க எந்தவிதமான தகுதியும் இல்லாதவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.