இராணுவமயப்படுத்தலினால் தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடை ஏற்பட்டுள்ளது- ஐ.நா

இலங்கையில் சிலபகுதிகள் தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடையாகவுள்ளதென ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் என் வுயுல்  தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே கிளெமென்ட் என் வுயுல் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு 1 வருடத்திற்கு பின்னரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து 6 மாத காலத்திற்கு பின்னரும் அவதானிக்கின்ற சூழ்நிலை மிகவும் மாற்றமடைந்து காணப்படுகின்றது.

அதாவது, நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை அரச சார்பற்ற அமைப்புகளின் செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலிருந்து வேறு அமைச்சுக்கு மாற்றப்பட்டிருந்தது

பின்னர் டிசம்பர் பத்தாம் திகதி, அரச சார்பற்ற அமைப்புகளின் செயலகம் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் வசம் சென்றுள்ளது.

இதேவேளை  கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான இடமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஆர்ப்பாட்டம் செய்வதற்கான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏனைய இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனக்கூறி கட்டுப்படுத்துவது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான நோக்கத்திற்கு முரணான செயற்பாடாகும்.

இதேவேளை இலங்கைக்கு கடந்த வருடம் நான் விஜயம் மேற்கொண்டிருந்தபோது ஜனநாயக மயப்படுத்தல், நல்லாட்சி, யுத்தத்திற்கு பிந்தைய நல்லிணக்கம் மற்றும் நிலைமாற்றுக்கால நீதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் சிறந்த முறையில் காணப்பட்டன.

ஆனால் தற்போது இவைகளில் முன்னேற்றங்கள் இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும் எந்ததொரு ஆர்வமும் காட்டப்படவில்லை.

மேலும் சில பகுதிகள் தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடையாகவுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.