ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கே நாடாளுமன்றில் அதிகாரம் இருக்க வேண்டும்- மஹிந்த

நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டுமெனில், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கே நாடாளுமன்றில் அதிகாரம் இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள்.

மக்கள் காண்பித்த இந்த வழியில் செல்ல எமக்கு நாடாளுமன்றிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகிறது.

ஜனாதிபதியின் செயற்றிட்டங்களை நிறைவேற்றவே இந்த பெரும்பான்மையை நாம் கோருகிறோம்.

அத்துடன் இந்த பெரும்பான்மையானது ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு இருக்க வேண்டுமே ஒழிய, இன்னொரு கட்சிக்கு இருக்கக்கூடாது.

நாம் செய்த செயற்பாடுகள் கடந்த நான்கரை வருடங்களாக நிறுத்தப்பட்டன. நாம் நிர்மாணித்த துறைமுகத்தை அவர்கள் விற்றார்கள்.அதேபோல், விமானநிலையத்தை விற்க முற்படும்போது நாம் உடனடியாக அதனை தடுத்தோம்.

இந்தியாவுக்குச் சென்று, இந்தியப் பிரதமருடன் பேசி, இந்த செயற்பாட்டை கைவிடுமாறு நாம் கேட்டுக்கொண்டிருந்தோம். இதற்கு அவர் செவிசாய்த்தார்.

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய எவருக்கும் அனுமதியளிக்க முடியாது. இது எதிர்க்கால சந்ததியினருக்கு சொந்தமான சொத்துக்களாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லவும், யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்து எம்மால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தவும் அனைவரும் எமக்கு ஆணை வழங்க வேண்டும்” என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.