இலங்கை மீது வலுவான அணுகுமுறையை பிரயோகிப்பது அவசியம்- சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்
இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் வலுவான அணுகுமுறைகளை பிரயோகிப்பது அவசியமென 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் அமைதியான முறையில் சுதந்திரமாகக் கூடுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான உரிமை பற்றி ஐ.நா விசேட அறிக்கையாளரினால், அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகளுக்கான சர்வதேசக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவைகள் உள்ளிட்ட 7 மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையிலேயே இலங்கை தொடர்பாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ஐ.நா.விசேட அறிக்கையாளரினால் சுட்டிக்காட்டப்பட்டதைப் போன்றே இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி வேகமாக சுருங்கி வருகின்றது.
மேலும் சிவில் சமூக அமைப்புக்கள், இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்கு அதிகளவு உட்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது,கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் ஊடாக கருத்துச்சுதந்திரம், அமைதியான முறையில் கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
அத்துடன் சமூக செயற்பாட்டாளர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்டற்ற அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில் இலங்கையின் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பகிரங்கமாகப் கருத்து வெளியிடக்கூடிய ஒரே தளமாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை காணப்படுகிறது.
ஆகவே இலங்கையில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதைக் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அவதானிக்க வேண்டும்.
மேலும் இலங்கை விவகாரங்களில் வலுவான அணுகுமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை