மாற்றத்தை விரும்புவோர் எங்களுடன் இணையுங்கள் – ஈ.பி.டி.பி
மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகள் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் என ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர் சி.கிரிதரன் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இத்தனை வருடமும் பல எதிர்பார்ப்புகளுடன் நாம் இருந்தோம். எனினும் எமது தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பூர்த்திசெய்யப்படவில்லை.எனவே மற்றவர்களை எதிர்பார்க்காமல் நாங்களே எமது தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும் நோக்குடன் இத்தேர்தலில் களம் இறங்கியுள்ளேன்.
எமது மக்கள் நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு துன்பங்களை சுமந்தவர்களாக உள்ளனர். எனவே அவர்களிற்கு அபிவிருத்தி என்பது முக்கியமானதாக உள்ளது.
இந்நிலையில் அரசுடன் இணைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.எதிர்ப்பு அரசியலை செய்வதன் மூலம் எமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததுடன் அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அரசுடன் இணைந்து பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளதுடன் பல இளைஞர் யுவதிகளிற்குஇவேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.
அவர் எப்போதும் கொள்கை மாறாத நிலையில் அன்று எதை கூறினாரோ இன்றும் அதனையே கூறிவருகின்றார்.இதனால் அவரது பாதையில் இணைந்து நாம் பயணிக்கின்றோம். மற்றவர்களை குறைகூறி அவர்களை பிழைபிடித்து வாக்குகளை சேகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மாறாக எமது கொள்கையில் தெளிவாக இருந்து எதைசெய்யப்போகின்றோம் என்பதை மக்களுக்கு தெரிவித்துள்ளோம்.
கூட்டமைப்பிற்கு பலவருடங்களாக எமது மக்கள் வாக்களித்து வருகின்றனர்.எனினும் ஏமாற்றங்களே மிஞ்சியுள்ளது. எனவே தொடர்ந்தும் அவர்களிற்கு ஆதரவளித்தால் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே ஏற்படும். எனவே மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகள் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இணக்க அரசியல் என்பது அரசிடம் மண்டியிட்டு அடிபணிந்து நிற்பதுஅல்ல. அவ்வாறான பாதையில் நாம் செல்லவும் மாட்டோம். மாறாக கூட்டாக இணைந்து ஆட்சியில் பங்களிப்பதே அதன் நோக்கம்.
அத்துடன் மாற்று தலைமை என்பதை நாம் முடிவு செய்யமுடியாது. அதனை மக்களே முடிவு செய்யவேண்டும். மாற்று தலைமை என்று கூறுவோர் எதிர்ப்பு அரசியலும், தேசியமும் பேசிக்கொண்டு ஒரே பாதையிலேயே பயணிக்கின்றனர். எனவே ஒரே பாதையில், ஒரே கொள்கையில் இருப்பவர்கள் மாற்று அரசியலை எப்படி செய்யமுடியும்” என தெரிவித்தார்,
கருத்துக்களேதுமில்லை