எந்தப் பேரினவாதக் கட்சிக்கேனும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது – கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் சரவணபவன் வலியுறுத்து
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2009ஆம் ஆண்டு இறுதிப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது வடக்கு மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துன்பங்களை இந்த அரசு கவனிக்கவில்லை. ஏகப்பட்ட துன்பியல்புகளைக் கவனிக்காமல் தமது வெற்றிக் கொண்டாட்டத்தில் மட்டுமே அரசு கவனம் செலுத்தியது. கோயில்களை அழித்தனர், பாடசாலைகளை அழித்தனர், மருத்துவமனைகளை அழித்தனர். இன்னும் என்னவெல்லாம் அழிக்கக்கூடாதோ அவற்றையெல்லாம் அவர்கள் அழித்தனர். ஆனால், இதில் எவையும் உரிய முறையில் அவர்களால் கட்டிக்கொடுக்கப்படவில்லை.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் உரிமையில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிக்குமோ உரிமை இல்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாட்ட வேட்பாளர் ஒருவர் இன்று தேர்தல் விதிகள் பலவற்றை மீறி பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். ஆனால், இதுகாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கில் எந்தப் பேரினவாதக் கட்சிக்கேனும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது.
இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்ளையும் கைப்பற்றும். அனைத்துக் கட்சிகளும் தமக்குள் பிளவடைந்து நிற்கின்றன. அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் இருக்கும் பிளவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கூடுதல் சாதகம். மக்களும் இதைப் புரிந்துகொண்டு கூட்டமைப்புக்கு வாக்களித்து கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். நாம் எந்தவொரு விடயத்துக்கும் விலைபோகாமல் தொடர்ந்து பயணிப்போம்” – என்றார்.
………………….
கருத்துக்களேதுமில்லை