சர்வதேச அமைப்புக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது: அரசாங்கத்திடம் ரணில் கேள்வி
உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், கொரேனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் ஸ்தீரமானக் கொள்கையொன்றுக் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா பரவலை அடுத்து வெலிசரை கடற்படை முகாம் முதலில் மூடப்பட்டது. பின்னர் வெளிசறைச் சிறைச்சாலையை மூடினார்கள். இதனையடுத்து பாடசாலைகளை மூடினார்கள்.
தற்போது மூடுவதற்கு ஒன்று மட்டும் தான் இருக்கிறது. அதாவது, இந்த அரசாங்கத்தை மூடி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தால், அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வினைக் கண்டுவிடலாம்.
அரசாங்கத்துக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்த எந்தவொரு ஸ்தீரமான திட்டமொன்றும் கிடையாது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவர்களைப் பொறுத்தவரை பொதுத் தேர்தலுக்கு சென்று, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.
இதனால், இன்று மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனமே இந்த வைரஸை உடனடியாக கட்டுப்படுத்த முடியாது என அறிவித்துள்ளது. ஆனால், இலங்கையில் இதற்கேற்ற வகையில் ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை.
சுகாதார அமைச்சருக்கு இதுதொடர்பாக தெளிவின்மை காணப்படுகிறது. உலக சுகாதார ஸ்தாபனம், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவற்றிலிருந்து இலங்கைக்கு கிடைத்த நிதிக்கு என்ன ஆனது?
இதுவரை 4200 மில்லியனுக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என தெரியவில்லை.
தேர்தலுக்காக பயன்படுத்தியுள்ளார்களா என்று கேட்க விரும்புகிறோம்.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சரும், அரசாங்கமும் பதில் கூறியே ஆகவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை