அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்- அப்துல்லாஹ் மஹ்ரூப்
அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்திற்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “சமூகம்சார் அரசியல் நலன்களை முன்னெடுக்கும் சிறுபான்மைத் தலைவர்களை, ராஜபக்ஷக்களின் அரசாங்கம் நெருக்குதலுக்கு உள்ளாக்கி வருகின்றமை கவலையளிக்கிறது. விசாரணை, கைது, பிடிவிறாந்து, வாக்குமூலம் என அரசாங்கம் தொல்லை செய்கிறது.
தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்காத, எமது தலைவர் ரிஷாட் பதியுதின் போன்றோரை அச்சுறுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். பொறுப்புமிக்க ஒரு அரசியல் தலைவரைத் தொடர்ந்து கெடுபிடிக்குள்ளாக்குவது, அவரை நம்பியுள்ள சமூகத்தின் மீதான அச்சுறுத்தல், அடக்குமுறைகளாகவே நாம் பார்க்கிறோம்.
எனவே, அரசியல் காரணங்களுக்காக இட்டுக்கட்டப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை