வலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை!

வலிகாமம் வடக்கின் பெரும்பாலான நிலப்பகுதிகள் 1989, 1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் சிறிலங்கா அரச படையினரால் கைப்பற்றப்பட்டு, இன்றுவரை அந்தப் பிரதேசத்தில் 25000 ஏக்கர் வரையான நிலப்பரப்பு தொடர்ந்தும் இராணுவத்தின் வசமே உள’ளது.

வலி.வடக்கு மக்கள் தாம் பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்ணில் மீண்டும் தமது இறுதிக் காலத்தை அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து மடியமாட்டோமா எனது பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளுக்கு தாம் பிறந்த மண்ணை மகிழ்வாக வாழ்ந்த அந்த பசுமையான நினைவுகளை மீட்கும் நினைவுகளை கொடுக்கமாட்டோமா என்று எண்ணி ஏங்கித் தவித்தார்கள்.

எத்தனையோ குடும்பத் தலைவர்கள் தமது பிள்ளைகளின் திருமணத்துக்கு சீர்வழங்க சொந்த நிலம் இன்றி வேறு பொருள்களின்றித் தவித்தார்கள். எமது மக்களின் விளைநிலங்களில் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு அவர்கள் அந்த நிலங்களில் விவசாயம் செய்து, அந்த விளைபொருள்களை மருதனார்மடம், சுன்னாகம், திருநெல்வேலி சந்தைகளில் சந்தைப்படுத்துவதைக் கண்டு மயிலிட்டி, பலாலி, வசாவிளான் மக்கள் ஏக்கத்தால் துடித்தார்கள்.

தமது மண்ணுக்கு தமது காலத்தில் மட்டும் அல்ல என்றைக்குமே தாம் செல்லமுடியாது என்று தமது மண்ணை மறந்து, வேறு இடங்களில் வசதிவாய்ப்புள்ளோர் நிரந்தரமாகக் குடியேறி, நிரந்தர வீடுகள் அமைத்து வாழ்ந்தோர் பலர். உறவினர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் ‘இ’என்ற நிவாரண அட்டையுடன் இடம்பெயர்ந்து வாழ்ந்தோர் பலர். ‘அ’ என்ற நிவாரண அட்டையுடன் அகதிமுகாம்களில் வாழ்ந்தோர் சிலர்.

எத்தனையோ போராட்டங்கள் நிலவிடுவிப்புக்காக வலி.வடக்கின் எல்லைப் பகுதியாகிய துர்க்கை அம்மன் ஆலயத்தின் முன் நடந்தன. 2012 ஆம் ஆண்டு வலி.வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தனால் நடத்தப்பட்ட போராட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனோகணேசன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா எனப் பலர் எமது மக்களின் நிலம் விடுவிக்கப்படவேண்டும் என தென்னிலங்கையில் இருந்துகூட வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

2013 ஆம் ஆண்டு. வடக்கு மாகாணசபை நிறுவப்பட்டதன் பின்னர் மாவைக் கந்தன் ஆலயத்தின் கிழக்கு வீதியில் நிலமீட்புப் போராட்டம். பருத்தித்துறையில் இருந்து போராட்டத்துக்கு மயிலிட்டி மக்கள் வாகனங்களில் ஆவரங்கால், புத்தூர் ஊடாக நிலாவரை , புன்னாலைக்கட்டுவனால் சுன்னாகம் வந்து போராட்டத்தில் பங்குபற்றினர். புலனாய்வாளர்களின் கெடுபிடி ஒருபுறம். அரசாங்கத்தோடு அற்ப சலுகைகளுக்காகவும் அமைச்சுப் பதவிக்காகவும் அவர்கள் செய்யும் அத்தனைக்கும் தலையசைக்கும் தமிழ் ஒட்டுக்குழுவின் கெடுபிடி மறுபுறம்.

இத்தனைக்கு மத்தியிலும் ”எமது நிலம் எமக்கு வேண்டும்” என்ற தளராத உறுதியோடு தள்ளாடும் வயதிலும் எத்தனையோ பேர் வாகனங்களில் வந்து போராட்டத்தில் கலந்து அன்று உணவு ஒறுத்திருந்துவிட்டு தாம் தற்காலிகமாக வாழ்கின்ற வீடுகளுக்கு பருத்தித்துறை நோக்கிச் செல்கின்றபோது அரச அடிவருடிகளான தமிழ் ஒட்டுக்குழுவினர் அந்த மக்களின் வாகனங்களை கல்லால் தாக்கி, மக்கள் மீது கழிவு ஒயில் ஊற்றிவிட்டு தப்பிச் சென்றார்கள். மக்கள் போராட்டத்தில் பங்குகொள்ளவரும்போதும் நிலாவரைப்பகுதிகளில் ஆணிகளை வீதியில் போட்டு மக்களைப் போராட்டத்துக்குச் செல்வதைத் தடுத்தார்கள். ஆனால் மக்கள் எதற்கும் அஞ்சவில்லை. மன உறுதியுடன் போராடினார்கள்.

இந்த நேரத்தில் அப்போது தமிழரசுக் கட்சியின் செயலாளராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராகவும் இருந்த மாவை சேனாதிராசா,  2003 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவிலே வலி.வடக்கு பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் என்று அடைக்கப்பட்டிருந்தபோது வலி.வடக்கு நில விடுவிப்பு தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்று தற்போதைய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனோடு ஆராய்ந்தார். அடித்துப் பறிக்கும் ஆயுத பலம் எம்மிடம் மௌனிக்கப்பட்டுவிட்டது. அஹிம்சைப் போராட்டங்களால் எந்தப் பயனும் கிடைப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, சட்டத்தின் ஊடாகவாவது நீதியை நிலைநாட்டி எமது மண்ணை மீட்போம் என்று மாவை சேனாதிராசா சிந்திக்கத் தொடங்கினார். வலி.வடக்கைச் சேர்ந்த 100 பேரைத் தெரிவுசெய்து அவர்களை மனுதாரர்களாகக் கொண்டு முதன்மை மனுதாரராக மாவை சோ.சேனாதிராசாவை வைத்து வழக்கைத் தாக்கல் செய்வோம் என்ற ஆலோசனையை சுமந்திரன் வழங்கினார்.

காலமாகியுள்ள வி.எஸ்.கணேசலிங்கம் சட்டத்தரணியும் சுமந்திரனும் மூத்த சட்டத்தரணி சதீஸ்தரனும் மாவை சேனாதிராசாவையும் சந்தித்து 100 பேரின் பெயரிலே வழக்குத் தாக்கல் செய்வோம் 100 பேர் தயாராக இருக்கின்றார்கள் என்று வந்து பார்த்தால் மாவை சேனாதிராசாவைத் தவிர இரண்டே இரண்டுபேர்தான் முன்வந்தார்கள். இவர்களை வைத்து 2003 ஆம் ஆண்டு 646, 647, 648 ஆகிய இலக்கங்களில் மூன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டன. வழக்குத் தாக்கல் செய்த உடனேயே அவர்கள் அந்த எல்லையைக் கொஞ்சம் அகற்றிவிட்டார்கள். ஒருவருடைய காணி விடுவிக்கப்பட்டுவிட்டது. அவரது வழக்கு தள்ளுபடியானது. ஒருசில மாதங்களிலே மற்றவர் மரணித்துவிட்டார். அவருடைய வழக்கும் தள்ளப்பட்டுவிட்டது. 2004 ஆம் ஆண்டு ஒரேயொரு வழக்குதான் எஞ்சியிருந்தது.

”மாவை சேனாதிராசாவின் பெயரில் உள்ள வழக்கு மட்டும்தான் மிஞ்சியது. மாவை சேனாதிராசாவின் பெயரில் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற வழக்கு இன்றைக்கும் இருக்கின்றது. மாவை சேனாதிராசாவின் வீடு விடுவிக்கப்பட்டுவிட்டது.

”2012 ஆம் ஆண்டு இந்த வழக்குத் தாக்கல் செய்வதில் ஒரு திருப்தி காணப்பட்டது.. மாவை சேனாதிராசாவின் காணி விடுவிக்கப்பட்டாடுவிட்டது. அவரது வழக்கைத் தள்ளுபடி செய்யவும் என்று அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். அதனை உடனடியாக மறுத்த சுமந்திரன், இல்லை அவர் மக்கள் பிரதிநிதி. அவரது காணி விடுவிக்கப்பட்டாலும் மக்களுடைய காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யமுடியாது. இதனை ஒரு பிரதிநிதித்துவ வழக்காக நடத்தலாம் என்ற வாதத்தை முன்வைத்து இன்றுவரை அந்த வழக்கு நடைபெறுகின்றது. அதன் அடிப்படையிலேயே நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன.பிரதிநிதித்துவ வழக்காக இதனைக் கொண்டுசெல்லலாம் என்ற தீர்பு கிடைத்ததால் அவருடைய வழக்கு இன்றைக்கும் அவருடைய பெயரிலேயே இருக்கின்றது. 2007 ஆம் ஆண்டு இந்த நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பு பெறப்பட்டது.. அந்த உத்தரவின் பிரகாரம் அப்போது மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விக்னராஜாவின் தலைமையிலே ஒரு குழு நியமிக்கப்பட்டு பகுதி பகுதியாக நில விடுவிப்பு ஆரம்பமானது.

”அப்பொழுதுதான் நிலங்கள் விடுவிப்பு ஆரம்பமானது. அது இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றது.இப்பொழுது துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.”

ஆகவே, எமது நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவேண்டுமாயின் வழக்கைத் தொடுத்த மனுதாரர்களில் தற்போதுள்ள ஒரே ஒருவரான மாவை சேனாதிராசாவின் வெற்றியை நாங்கள் உறுதிப்படுத்தியே ஆகவேண்டும். தற்போது நில விடுவிப்பு வழக்கு பிரதிநிதித்துவ வழக்காகவே உள்ளது. மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தை அவர் இழக்கின்றபோது அந்த வழக்கு தள்ளுபடியாகும். ஆகவே, மாவையின் வெற்றி எமது மக்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

தெல்லியூர் சி.ஹரிகரன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.