காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்படவில்லை – விஜயதாச

புலம்பெயர் தமிழர்களும் வெளிநாடுகளும் விரும்பிய விதத்திலேயே காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் உருவாக்கப்பட்டதேயன்றி, தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது முன்னைய அரசாங்கம் ஆரம்பித்த காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகமே காணப்படுகின்றது.

அந்த அலுவலகத்துக்கு நல்லிணக்க உத்தியோகத்தர் என ஒருவர் நியமிக்கப்பட்டார். அதற்காக அரசாங்கம் பில்லியன் ரூபாய்களை செலவிட்டது. ஆனால் எந்த நல்லிணக்கமும் ஏற்படவில்லை.

காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் காரணமாகவே நாங்கள் அதனை கடுமையாக விமர்சிக்கின்றோம். அது சர்வதேச சமூகத்தினாலும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளாலும் உருவாக்கப்பட்டது.

அவர்கள் விரும்பிய விதத்திலேயே காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்களை தொடர்ந்தும் பேணுவதற்காகவே காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்படவில்லை.

எங்களால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு எங்கள் புரிந்துணர்வின் மூலம் உதவமுடியும்.

காணாமல்போனவர்கள் அலுவலகம் குறித்து இதுவரையில் அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. புதிய அரசாங்கம் உருவானதும் என்ன கொள்கைகள் முன்னெடுக்கப்படும் என என்னால் தெரிவிக்க முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.