யாழ். பல்கலைக்கழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்கிறது – மாணவர் பிரதிநிதிகள் தெரிவிப்பு
யாழ். பல்கலைக்கழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்பதனால், சட்டபீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அழுத்தத்தங்களால் ‘சட்ட முதுநிலை விரிவுரையாளர்’ பதவியை இராஜினாமா செய்தார் என யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் லூ.அனுஷன் தெரிவித்தார்.
கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை கடந்த 17 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி வைத்திருக்கிறார்.
தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்துள்ளமையை காரணமாக காட்டியுள்ளார்.
தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டிருக்க, தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத்தன்மை இல்லாதிருக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்று தனது இராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளர்.
இந்நிலையில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களை, யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் சட்ட மாணவர்கள் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ். பல்கலைக்கழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்கின்றது. அதனால் தான் சட்டபீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குருபரனுக்கு அழுத்தம் கொடுத்து, நிர்பந்தித்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டது. அரசிற்கு எதிரான வழக்குகள் செய்தமையால் தான் அவருக்கு இந்த நிலமை ஏற்பட்டது.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சொன்னதை பேரவை சிரமேற்கொண்டு செயற்படுத்துகின்றது. அது பேரவையின் சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. எனவே பல்கலைக்கழக சமூகம் தவிர்ந்து ஏனைய சமூகங்களும் ஒன்றிணைந்து எமது பல்கலைக்கழகம் சுயாதீனமாக செயற்பட குரல் கொடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
அதேவேளை யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவியான கதிர் தர்சினி தெரிவிக்கையில், ‘இன்று இதுவொரு தனி மனிதரின் பதவி விலகலாக இருக்கின்றது. நாளை ஏனையவர்களுக்கும் நடக்கலாம். பல்கலைக்கழகம் சுயாதீனமாக செயற்பட வேண்டும். அதிகாரமுள்ள நிறுவனமாக பல்கலைக்கழகம் இருக்க வேண்டும். அதனூடாக புலமை சுதந்திரத்தை இழாக்காது காக்க வேண்டும்.
ஒரு கல்வி சுதந்திரத்தை அடக்குவது அடிப்படை மனிதவுரிமை மீறல் என்பதுடன் எமது புலமைச் சுதந்திரத்தை நசுக்குவதன் ஊடாக நாம் பாதிக்கப்படவுள்ளோம்.
இப்படியே நிலமை செல்லுமாயின் மாணவர்கள் தமது கல்வி செயற்பாட்டில் மாத்திரமே ஈடுபட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டு மாணவர்கள் அடக்கப்படும் நிலைமைகள் வரும். அதன் பின்னர் நாம் குரல் கொடுப்பது தாமதித்த குரலாக இருக்கும்.
எனவே பல்கலைக்கழகம் சுயாதீனமாக செயற்பட வேண்டும். வெளியில் இருக்கும் அழுத்தங்களுக்கு அடி பணிவதன் ஊடாக எமது கல்வி வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது.
வெளி அழுத்தங்களுக்கு அடிபணியாது, பல்கலைக்கழகம் சுயாதீனமாக செயற்பட்டு எமது புலமை சுதந்திரங்களை காப்பதன் ஊடாக கல்வியை மேம்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை