சமஷ்டிக்கும் தமிழீழத்துக்கும் வித்தியாசம் தெரியாத மஹிந்த – சாடுகின்றார் சரவணபவன்

 “தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை தெற்கில் உள்ளவர்கள் திரிவுபடுத்துகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகிச் சில நாட்களிலேயே தெற்கில் இனவாதக் கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன. நாம் மீண்டும் தமிழீழம் கேட்கின்றோம் என்று பரப்புரைப்படுத்துகின்றனர். அவர்கள் பதவியைப் பிடிப்பதற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான சமஷ்டியை இந்த நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமிழீழம் என்பதற்குச் சமப்படுத்திக் கருத்துத் தெரிவித்துள்ளார். ஒரு பொறுப்பான பதவியில் உள்ளவர், இவ்வாறு மக்கள் மத்தியில் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்வது அழகானதல்ல. அவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக பெரும்பான்மை மக்கள் மத்தியில் இனத் துவேசத்தை விதைக்கின்றனர்.

 

அமைதிக்கும், தர்மத்துக்கும் மறுவடிவமாக இருக்க வேண்டிய பௌத்த தேரர்கள் தெற்கில் இரத்தம் வெள்ளம் பாயும் என்கின்றனர். இந்த நிலைமை முழு நாட்டுக்குமே கேடானது.

ராஜபக்சவினர் பதவிக்காக எதையும் செய்யும் நிலையில் இருக்கின்றனர். பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள  வேண்டும் என்பது அவர்களின் இலக்காக இருக்கின்றது. மக்கள் மத்தியில் இனத்துவேசத்தையும், தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்தி அதில் குளிர்காயலாம் என்று எண்ணுகின்றனர்.

வடக்கில் இரத்த வெள்ளம் பாயும் என்று அவர்கள் கூறுவதை சாதாரணமாகவும் நினைத்துவிட முடியாது. ஏனெனில் கடந்த காலங்களில் அவ்வாறான கொடூரத்தை அவர்கள் செய்திருக்கின்றனர்.

அவர்கள் பசப்பு வார்த்தைகளைக் கூறி தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு தமிழ் பிரதேசத்தில் இருந்து ஒருவரையாவது நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கின்றது. அப்போதுதான் தமிழ் மக்கள் தங்களை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று சர்வதேசத்திடம் கூறமுடியும்.

ராஜபக்சவினர் ஆட்சிக்கு வந்ததும், நாட்டின் நிலைமை மாறி வருகின்றது. தமிழ் மக்கள் மீதான இறுக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கின்றது. நாங்கள் கேள்வி கேட்க முடியாத நிலைமை தோற்றம் பெறுகின்றது. மீண்டும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிடுகின்றனர். தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைக் கோரும்போது இனவாதத்தைக் கக்குகின்றனர். இவ்வாறானவர்களுக்குப் பெரும்பான்மை கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.