தேசிய சொத்துக்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்வது மாத்திரமே ஐ.தே.க.வின் இலக்கு- மஹிந்த
தேசிய சொத்துக்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே இலக்காக உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெலிமடையில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை இன்னொரு கட்சியிலும் இருக்கும்போது எவ்வாறான விளைவுகள் வரும் என்பதை நாம் கடந்த காலங்களில் பார்த்தோம்.
மைத்திரிபால சிறிசேன கூறியதை ரணில் விக்ரமசிங்க கேட்கவில்லை. அதேபோல், ரணில் விக்ரமசிங்க கூறியதை மைத்திரிபால சிறிசேன கேட்கவில்லை.
இதனால், இரண்டு தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதன் விளைவாக மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள்.
கடந்த 5 வருடங்களாக எந்தவொரு வேலையையும் கடந்த அரசாங்கம் செய்யவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
அவர்களுக்கு எமது தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும். இதுதான் இலக்கு. கடந்த காலங்களில் நாம் நிர்மாணித்த துறைமுகம் உள்ளிட்ட சொத்துக்களை விற்றார்கள்.
சர்வதேசத்திற்கு விற்பனை செய்த ஒரு சொத்தை மீண்டும் எடுப்பது அவ்வளவு இலகுவான காரியம் கிடையாது. நாம் நாடுகளுடன் பேச்சு நடத்த வேண்டும். இதனால், நாடுகளுக்கிடையிலான நட்புறவு இல்லாது போகும். இந்த நிலைமையை ஐக்கிய தேசியக் கட்சிதான் ஏற்படுத்தியது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை