நல்லூர் திருவிழாவில் கொரோனா விதிமுறைகளை உறுதிப்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர் அறிவுரை
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் திருவிழாவில் நாடளவில் அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களையும் நடைமுறைகளையும் உரியமுறையில் பின்பற்ற வேண்டுமென வடமாகாண ஆளுநர் பீபி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுக்கொண்டார்.
வடமாகாண மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலொன்று வடமாகாண ஆளுநர் தலைமையில் இன்று சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் ஆளுநரின் செயலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மாகாணத்தில் இடம்பெற்றுவரும் போதைப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பில் ஆளுநர் வழிகாட்டலுக்கு அமைவாக போதைப்பொருள் மறுவாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பாகவுள்ள நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அதற்கான திட்டமிடல்களையும் சம்மந்தப்பட்ட விடயங்களை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
அவ்விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்திய ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக தற்காலிகமாக மூடப்பட்ட நிலையிலுள்ள பாடசாலை ஒன்றினை அடையாளம் கண்டு அதனை மறுவாழ்வு மையமாக மாற்றலாம் என கூறினார்.
போதைப்பொருள் வைத்திருப்பவர்களைப் கைது செய்தால் அவர்களை மறுவாழ்வு மையத்திடம் கையளிப்பது தொடர்பிலுள்ள சட்டரீதியான பிரச்சினைகளைப் பற்றிய அறிக்கையை தாமதமின்றி தயாரித்து தன்னிடத்தில் கையளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அவ்விடயங்கள் தொடர்பாக தான் அமைச்சரவை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதாகவும் கூறினார்.
மேலும் நல்லூர் திருவிழாவில் நாடளவில் அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களையும் நடைமுறைகளையும் உரியமுறையில் கடைபிடித்து கொரோனா தொற்றுப்பரவலில் இருந்து சமூகத்தை காப்பாற்ற வேண்டிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.
நேர அட்டவணை தயார்செய்து அதனடிப்படையில் பூஜைகளை நடத்தலாம் என்றும் எமது மாகாணக் கோவில்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுவதை தான்விரும்பவில்லை என்றும் குறிப்பிட்ட ஆளுநர் தேவைப்பட்டால் பொலிஸ் உதவியை நாடி மக்களைக்காப்பதற்கான அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை