தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரம் சேகரிப்பு

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, “வேட்பாளர்களின் சொத்து விபரங்களை பார்க்க விரும்புபவர்கள் தேர்தலின் பின்னர் முன்அனுமதியுடன் அவற்றை பார்வையிடலாம்.

பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் சொத்து விபரங்கள் மாத்திரமே பகிரங்கப்படுத்தப்படுவன.

தேர்தலில் வெற்றி பெறும் ஒருவர் வேட்பாளராக இருந்தபோது எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தார் என்பதை ஒருவர் அறிவதன் மூலம், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பதையும் பதவித் துஸ்பிரயோகம் அல்லது முறைகேடுகள் மூலம் சொத்துக்களை சேகரித்தாரா என்பதையும் அறிய முடியும்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தமது மாதாந்த படிகளின் 8 சத வீதத்தினை பொதுமக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அவர்கள் விரும்பிய ஒரு அறக்கட்டளை நிதியத்துக்கு மாதாந்தம் வழங்க வேண்டும்.

அது தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியமாகவும் அமையலாம். அதேவேளை, ஆகக்குறைந்தது 2 சதவீதத்தினை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுவான செலவீனங்களுக்காகவும் வழங்கவேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.