இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கே. மதிவாணன்!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவித்துள்ளார்.
இன்று(புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிர்வாகம் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படாததன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் அரசியலமைப்பிற்கிணங்க, உப தலைவர்கள் இருவருக்கும் சம்பிரதாயபூர்வமாக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட்டில் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் நிகழ்காலத்தில் தமக்கு எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் தாம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது போன்று உணர்ந்துள்ளதாகவும் கே.மதிவாணன் தமது அறிக்கையினூடாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், செயற்குழுக் கூட்டங்கள், நிர்வாகக்குழு கூட்டங்கள், நிதி கொடுக்கல் வாங்கல் விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள் உட்பட ஏனைய சந்தர்ப்பங்களில் தமது எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டினூடாக தாம் அடைந்த உயர்மட்ட நற்பெயருக்கு இதனால் எதிர்காலத்தில் களங்கத்தை ஏற்படுத்திக்கொள்ள தாம் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை