நள்ளிரவு 12 மணியுடன் இராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்

இன்று நள்ளிரவு 12 மணியுடன் இராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது என வன்னி தேர்தல் தொகுதியின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கோட்டாபய ராஜபக்ச அவசர அவசரமாக நாடாளுமன்றத்தினை கலைத்துவிட்டு நாடாளுமன்ற சட்ட ஆட்சியை உருக்குழைத்தமையினால் இந்த அராஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நிலை வந்துவிட்டது. அதுவே எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல்.

இந்த தேர்தல் முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தில் பிரச்சனையொன்று வெளிவரவுள்ளது. இதுவரை காலமும் தனது ஜனாதிபதி அதிகாரத்தினை வைத்துக்கொண்டு நடத்திவந்த அராஜக ஆட்சிக்கு எதிராக நாடாளுமன்றம் குரல் கொடுக்கும். இவ்வாறு குரல்கொடுக்கும் போது பாரிய முரண்பாடுகளை அவர் சந்திக்க வேண்டி வரும்.

நாடாளுமன்றம் இல்லாத நிலையில் ஜனாதிபதி பல செயலணிகளை உருவாக்கியுள்ளார். குறிப்பாக கிழக்கில் தொல்பொருள் செயலணியை உருவாக்கி தாங்கள் நினைத்ததை நினைத்த இடத்தில் செயற்படுத்துவதற்கு முயற்சித்ததை நாங்கள் காணலாம்.

இன்று நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டங்கள் கூட நாடாளுமன்ற சட்டவாக்கத்தினூடாகத்தான் செயற்படுத்தலாம். அந்த முறையை நாடாளுமன்றத்தினை கலைத்ததன் மூலம் உருக்குழைத்து விட்டு சகல அதிகாரங்களையும் தான் வைத்துக்கொண்டு நடாத்தப்பட்ட அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் ஓகஸ்ட் 5 ஆக இருக்க வேண்டும்.

இதில் சிங்கள மக்களும் அராஜக விடயங்களை விளங்கிக்கொள்வார்கள் என எண்ணலாம். சிங்கள மக்களும் திருந்திவிட்டதாக நாம் நம்பலாம்.

தமிழர்களை பொறுத்தவரையில் எங்களுடைய காணிகளை மீட்டெடுப்பதற்காக நீண்ட காலமாக போராடிக்கொண்டிருக்கின்றோம். எனினும் கொரோனாவிற்காக பயிர்ச்செய்கை என சொல்லிக்கொண்டு செட்டிகுளத்தில் தாங்கள் தங்களுக்கான இராணுவ ஆக்கிரமிப்பை விஸ்தரிக்கின்றனர்.

இதனடிப்படையில் அரசு சகல விடயங்களிலும் பாரிய தவறை இழைத்து வருகின்றது. ஓகஸ்ட் 5 இல் ஜனநாயக தேர்தல் நடைபெறவுள்ளது என சொன்னால் இன்று நள்ளிரவுடன் அனைவரும் தேர்தல் பிரசாரத்தினை முடிவுறுத்தி அனைவரும் சாதாரண நிலைக்கு செல்ல வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே அது நடக்க வேண்டுமாக இருந்தால் இராணுவத்தினர் இன்று 12 மணியுடன் அவர்களது முகாம்களில் அடைக்கப்படவேண்டும். அவ்வாறு நடக்காதவிடத்து சுதந்திரமான தேர்தல் நடைபெறாது என்பதனை கூறிக்கொள்கின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.