யுவதியை மீட்க ஏரியில் குதித்த இளைஞர் நீரில் மூழ்கி மாயம்
நேற்று பண்டாரகம – பாணந்துறை வீதியிலுள்ள பொல்கொட பாலத்திலிருந்து யுவதி ஒருவர் ஏரியில் குதித்துள்ளார். யுவதியை மீட்பதற்காக குறித்த இளைஞர் ஏரிக்குள் பாய்ந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த யுவதி பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆயினும், நீரில் குதித்த குறித்த இளைஞர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, வெல்லன்துடுவவில் வசிக்கும் யுவதியின் உறவினரான இளைஞரே இவ்வாறு ஏரிக்குள் குதித்து காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணியில், பொலிஸார் மற்றும் மீட்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த யுவதிக்கும் மற்றுமொரு இளைஞனுக்கும் இடையில் இருந்த காதல் தொடர்பை அடுத்து, அந்த இளைஞரின் நடவடிக்கை சரி இல்லை எனத் தெரிவித்து, யுவதியின் குடும்பத்தினரால் இளைஞருக்கு அறிவுறுத்தப்பட்டு அவர்களின் தொடர்பு இடைநிறுத்தப்பட்டது எனவும், ஒன்றரை வருடத்துக்கு முன்னர் இவ்விடயம் இடம்பெற்றது எனவும் யுவதியின் சித்தி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த யுவதிக்கு மற்றுமொரு நபரைத் திருமணம் முடித்து வைப்பதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வந்துள்ள நிலையில், ஏற்கனவே அவரைக் காதலித்த இளைஞர், குறித்த யுவதி தன்னுடன் இருந்த புகைப்படங்களைத் தற்போது திருமணம் முடிக்க இருந்த நபருக்கு அனுப்பி வைத்தார் எனவும் யுவதியின் சித்தி கூறினார்.
இந்தநிலையிலேயே குறித்த யுவதி தற்கொலை செய்யும் முயற்சியை எடுத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை