பௌத்த மதத்துக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவதைத்தான் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்று கூறுவதா ?

இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் கடைப்பிடிக்காத பௌத்த கொள்கையை ராஜபக்ச அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது. அதாவது பேச்சளவில் ஒரே நாடு, அனைத்து இன, மொழி, மதத்தினர்களுக்கும் ஒரே சட்டம் என்று பிரச்சாரம் செய்துகொண்டு நடைமுறையில் பௌத்த மதத்துக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் எந்தவொரு ஆட்சித் தலைவர்களும் தேர்தல் வெற்றிக்கு பின்பு பதவியேற்பு வைபவங்களை அல்லது அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்குவதனை ஜனாதிபதி செயலகத்தில் அல்லது அலறி மாளிகையில் நடாத்துவது வழமையாகும்.

ஆனால் வழமைக்கு மாறாக ராஜபக்சாக்கள் தங்களது பௌத்த மதத்தினை மட்டும் முன்னிலைப்படுத்தி அனைத்து பதவியேற்பு வைபவங்களையும் பௌத்த வழிபாட்டுத்தளங்களில் நடாத்தியுள்ளனர்.

அந்தவகையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டபாய ராஜபக்ச அவர்கள் அனுராதபுரம் “ருவான் வெளிசாய” வில் தனது பதவியேற்பு வைபவத்தினை மேற்கொண்டார்.

தமிழ் மன்னனான எல்லாளனை தோற்கடித்தபின்பு துட்டகைமுனு என்னும் சிங்கள மன்னனால் வெற்றியின் நினைவாக அனுராதபுரத்தில் கட்டப்பட்டதுதான் ருவான் வெளிசாய தூபம் ஆகும்.

பிரபாகரனை தோற்கடித்தபோது மஹிந்த ராஜபக்ச அவர்களும் துட்டகைமுனு என்றே அப்போது அழைக்கப்பட்டார். அதனை மீண்டும் நினைவுபடுத்துவதாகவே ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவமும் அமைந்திருந்தது.

அதுபோல் பிரதமராக மஹிந்த ராஜபக்ச அவர்கள் களனி ரஜமஹா விகாரையில் பதவியேற்றார். அதன்பின்பு அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாணம் தலதா மாளிகையில் நடைபெற்றது.

தலதா மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான பதவியேற்பு வைபவமானது போயா தினத்தில் நடைபெறுகின்ற பௌத்த மத அனுஸ்டானம் போல காட்சியளித்தது.

அதாவது ஆரம்ப நிகழ்வில் பௌத்த பிக்குகள் நீண்டநேரம் பௌத்த சமய நிகழ்வுகளை நிகழ்த்தியதன் பின்பே பதவியேற்பு நடைபெற்றது. இதில் ஏனைய இஸ்லாம், கிறிஸ்தவம், ஹிந்து ஆகிய சமய மதகுருமார்கள் எவரும் அழைக்கப்படவில்லை.

இத்தனைக்கும் மேலாக அமைச்சர்களுக்கான பதவியேற்பு வைபவத்தினை முன்னிட்டு கண்டி நகரம் சர்ச்சைக்குரிய தேசிய கொடியினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதாவது தமிழ், முஸ்லிம் மக்களை அடையாளப்படுத்தும் மஞ்சள், பச்சை நிறங்கள் நீக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட சிங்கக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.

தென்னிலங்கையில் உள்ள பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாதக்குழுக்கள் கடந்த காலங்களில் தேசியக்கொடியில் உள்ள முஸ்லிம், தமிழ் மக்களை குறிக்கின்ற பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களை அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் அதே சர்ச்சைக்குரிய கொடி அரசின் தேசிய வைபவமொன்றில் ஏற்றப்பட்டதானது இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கானதா அல்லது எதிர்காலத்தில் இனவாதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கொடியில் மாற்றம் செய்வதற்கான ஒத்திகையா என்ற சந்தேகம் உள்ளது.

இதனை தமிழ் தலைவர்கள் மட்டுமே கண்டித்து அறிக்கை விடுத்தனர். ஆனால் தேர்தல் காலங்களில் பொங்கியெழுகின்ற முஸ்லிம் தலைவர்கள் எவரும் இதுபற்றி வாய் திறக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை.

ஆனால் சிலர் அது கண்டி ராசதானிக்குரிய கொடி என்று நியாயம் கூறுகின்றார்கள். தேசிய வைபவம் ஒன்றில் இதுவரை ஏற்றப்படாத ஒரு பிராந்திய கொடியினை ஏன் ஏற்றவேண்டும் என்பதுதான் கேள்வியாகும்.

அதுமட்டுமல்லாது ஜனாதிபதி, பிரதமருடன் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் எடுத்துக்கொண்ட வரலாற்று புகைப்படத்திலும் தலதா மாளிகையை பின்னனியாககொண்டே எடுக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ், முஸ்லிம் மக்களிடம் ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறிக்கொண்டு தங்களது பௌத்த மதத்துக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவதானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.