வவுனியாவில் வன்னி மன்னன் பண்டார வன்னியனின் நினைவு நாள் நிகழ்வு
August 25th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.
வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது.
வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன் விழாக்குழுவும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
காலை 8.15மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு, ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாகவிருந்தவருமான மு.சிற்றம்பலம் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் , நகரசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்பினர் , வர்த்தக சங்கத்தினர் , முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் , பொதுமக்கள் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் தமிழரருவி சிவகுமார் அவர்களினால் நினைவுரையும் நிகழ்த்தப்பட்டது.
இதனையடுத்து காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியன் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தை எதிர்த்துப் போராடி மடிந்தவராவார்.
இவரின் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து உலகில் வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளமை இவரின் வீரத்திற்கு சான்றாகும்.
கருத்துக்களேதுமில்லை