நல்லாட்சியில் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் சுயாதீன தன்மை இல்லை என்கிறார் கெஹலிய!
“நல்லாட்சி அரசால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்படவில்லை. அதைச் சுயாதீனமாக்குவது தொடர்பில் சில மாற்றங்களை எதிர்வரும் அரசமைப்பு திருத்தம் மூலம் மேற்கொள்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது.”
– இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஆணைக்குழுவை நியமித்த அரசமைப்பு பேரவை அங்கத்தவர்கள் 10 பேரில் 7 பேர் நல்லாட்சி அரசை சேர்ந்தவர்கள் என்றும், அதில் செயற்பட்ட மூன்று சிவில் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இம்முறை பொதுத் தேர்தலில் தமது வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கண்டி ஹரிஸ்பத்துவவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சுயாதீன ஆணைக்குழு எனக் குறிப்பிடப்படுகின்றபோதும் அடிப்படை விடயங்கள் கூட அதில் மீறப்பட்டுள்ளன. அதனால் அதனை நிவர்த்திசெய்ய வேண்டியது அவசியமாகும்.
தகவல் அறியும் சட்டமூலம், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருட காலத்துக்கு மட்டுப்படுத்தல், இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது போன்ற காரணங்கள் 20ஆவது அரசமைப்பில் உள்ளடக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டு மக்கள் தற்போதைய அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுத்துள்ளமை நாட்டுக்குப் பொருத்தமான அரசமைப்பொன்றை உருவாக்குவதற்காகவே ஆகும்.
19ஆவது அரசமைப்பு திருத்தம் நாட்டின் எதிர்காலப் பயணத்துக்குப் பாரிய தடையாக அமையும். அதன் விளைவுகளை கடந்த காலங்களில் கடுமையாக அனுபவிக்க நேர்ந்தது.
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒரு வார காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு திருத்தமாகும் என்பதால் அதில் குறைபாடுகள் இருக்க முடியும். அது தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சு நடத்தப்படும்.
விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வெளியிடும் கூற்றுக்கள் இனவாதம் சார்ந்தவை. தேசிய ஒற்றுமைக்கு அது பெரும் பாதிப்பாக அமையும் என்று நாம் நினைக்கின்றோம்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை