மட்டக்களப்பு இருதயபுரம் பொது மயாண பயன்பாடு தொடர்பான பிணக்கானது சமூக மட்ட அமைப்புகளின் துணையுடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது!!

மட்டக்களப்பு இருதயபுரம் பொது மயாண பயன்பாடு மற்றும் எல்லை தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வந்த பிணக்கானது சமூக மட்ட அமைப்புகளின் துணையுடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட இருதயபுரம் பொது மயாணத்தின் பயன்பாட்டு உரிமம்  மற்றும் எல்லை பிரச்சனையானது கடந்த காலங்களில் மதம் சார்பான முரண்பாடாக வலுவடைந்திருந்திருந்தது.

இதனை தொடர்ந்து இம்மயாணத்தின் உரிமம் தொடர்பாக ஏலவே வழங்கப்பட்டிருந்த நீதிமன்றத்தின் தீர்ப்பினை தழுவியதாக ஆலய பரிபாலன சபையினர், கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் விளையாட்டுக் கழக இளைஞர்களுடன் நடாத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (01.09.2020) மாநகர முதல்வரின் தலைமையில், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கெஷ்வரன், மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகளின் முன்னிலையில் இரு மத பிரிவினரும், விளையாட்டு வீரர்களும் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்குரிய எல்லையினை அடையாளப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மிக நீண்ட காலமாக நிலவிவந்த  குறித்த மயாணத்தின் பிணக்கினை தீர்த்து இரு மதங்களுக்கு இடையே நிலவி வந்த முரண்பாட்டினை முடிவுக்கு கொண்டு வந்ததோடு ஒரே பிரதேசத்தில் சகோதரத்துவமாக வாழக்கூடிய சூழலினையும் உருவாக்கி தந்தமைக்காக மாநகர முதல்வர் உள்ளிட்ட குழுவினருக்கு மதத் தலைவர்களும், இளைஞர்களும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த மயாணத்தினை பயன்படுத்துவது தொடர்பில் எழுந்த சிறிய பிரச்சனையை பூதாகரமாக்கி அரசியல் பிணக்காக சோடிக்க பலர் முனைந்திருந்தார்கள். எனினும் இதனை ஓர் மதக் கலவரமாக்க விரும்பாது இரு மதங்களின் பிரதிநிதிகளும் பொறுப்புடன் நடந்து கொண்டிருந்தார்கள். இதன் காரணமாகவே இப்பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காண முடிந்துள்ளதாகவும், இதேபோல் தொடர்ந்தும் இன-மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவருமிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் மாநகர முதல்வர் கேட்டுக் கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.