மூடிக்கிடக்கும் கட்டிடத்தை திறக்கக்கோரி அதிபரிடம் பெற்றோர் கோரிக்கை – அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடிய பெற்றோர்கள்
சுமார் 75 வருடங்கள் பழமை வாய்ந்த அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் தோமஸ் மண்டபத்தின் மேல் மாடி ஆபத்து நிறைந்ததாக உள்ளதாகவும், அங்கு தமது பிள்ளைகளை எக்காரணங் கொண்டும் கல்வி கற்பதற்கு அனுப்ப முடியாது என்றும் மேற்படி கட்டிட வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் 02.09.2020 அன்று காலை கல்லூரி அதிபரின் காரியாலயத்துக்கு முன்பாக திரண்டு கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.
அதே வேளை நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வே.ராதாகிருஷ்ணன், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அமைத்து கொடுத்த புதிய கட்டிடத்தின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டும் திறக்கப்படாமலேயே இருப்பது குறித்தும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர். மேற்படி சேதமுற்றதாகக் கூறப்படும் வகுப்பறை மாணவர்களுக்காகவே புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளமையை பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து கல்லூரி அதிபர் புதிய கட்டிடத்தை திறப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது என்று தெரிவிக்கவே அதற்கு பெற்றோர்கள் அப்படியானால் புதிய கட்டிடம் திறக்கும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பப்போவதில்லை என்றும் வலயக் கல்வி பணிப்பாளர் வரும் வரை இங்கிருந்து செல்ல முடியாது என்றும் பெற்றோர்கள் பிடிவாதமாக நின்றனர்.
இது குறித்து அங்குள்ள பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
தோமஸ் மண்டபத்தில் மேல் மாடியின் கூரைகள் எப்போது இடிந்து விழும் என்று தெரியாது, அதே வேளை கீழ்ப்புறமாக பலகைகள் இற்றுப்போய் கழண்டு விழும் அபாயம் இருப்பதால் குறித்த பகுதிக்கு மாணவர்கள் செல்ல வேண்டாம் என கல்லூரி நிர்வாகமே தடை போட்டிருக்கின்றது.
அபாயமான பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பிள்ளைகளைப்பற்றிய எந்த அக்கறையும் இன்றி கல்லூரி நிர்வாகம், தரம் 6 மாணவர்களுக்கு அங்கேயே வகுப்புகளை தொடர்ந்தும் நடத்துகின்றது. பல தடவைகள் நாம் எடுத்துக் கூறியும் இது குறித்து எவருமே அக்கறை கொள்கின்றார்கள் இல்லை. மேலும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய இரண்டு மாடி கட்டிடம் மூடப்பட்டுள்ளது.
அது குறித்து கேட்டால் அதில் அதிபர், பிரதி அதிபர்களுக்குரிய காரியாலயங்கள் வரவிருப்பதாக சிலர் கூறுகின்றனர். இப்போது தேவை மாணவர்கள் கல்வி கற்பதற்கான வகுப்பறைகளே ஒழிய அதிபர் காரியாலயம் அல்ல. ஏற்கனவே புதிய கட்டிடத்தில் காரியாலயம் இயங்கி வருகின்றது.
நாம் எமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி விட்டு அச்சத்தில் இருக்கின்றோம். எனவே இதற்கு ஒரு தீர்வு அவசியம். அதே வேளை பெற்றோர்களாகிய நாம் எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டங்களும் இடம்பெறுவதில்லை. புதிய அதிபர் பதவியேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் இது வரையிலும் பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டம் நடத்தப்படவில்லை. வகுப்பு ரீதியாக பெற்றோர் கூட்டங்களை நடத்தி மேசை நாட்காலிகளை திருத்தி தர கூறுகிறார்கள். இது அரசாங்க பாடசாலையா தனியார் பாடசாலையா என்று எமக்கு சந்தேகம் எழுகிறது. நகரப் பகுதியில் பிரபலமான இந்த பாடசாலையில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்து வலயக்கல்வி பணிமனை அக்கறை கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதே வேளை அவ்விடத்துக்கு வருகை தந்த பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், கூட்டங்களை நடத்துவதற்கு அதிபர் அனுமதி தர வேண்டும் தன்னால் தன்னிச்சையாக கூட்டத்தை ஏற்பாடு செய்ய முடியாது என பெற்றோர்களிடத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து வெகு விரைவில் புதிய கட்டிடத்தை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக திறப்பதற்கு வலயக்கல்வி பணிப்பாளர் உறுதியளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அது தொடர்பில் கடிதம் ஒன்றையும் அனைவரும் கையொப்பமிட்டு வலயக்கல்வி பணிமனையில் ஒப்படைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை