சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது-இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு.

சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது-இம்ரான்
சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (1)மாலை கிண்ணியா சூரங்கல்லில்  மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சிங்கராஜ வனத்தின் ஒருபகுதியை ஊடறுத்து வீதி ஒன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்த சர்ச்சையால் அந்த இடத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அந்த பாதையின் நிர்மாணப்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதி அளித்திருந்தார்.
சிங்கராஜா வனத்தை ஒட்டி வாழும் மக்களுக்கு கிடைக்கும் அபிவிருத்தி வில்பத்துவை அண்டி வாழும் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.யுத்தத்தால் இடம்பெயர்ந்த அந்த பகுதி மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள குடியமர்ந்த போது வில்பத்து வனப்பகுதியை அம்மக்கள் அழிக்கிறார்கள் என கூறியவர்களே இன்று வனப்பகுதிக்கு சேதம் ஏற்படாமல் பாதையை அமைக்க முடியும் என கூறுகின்றனர்.
வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதை அமைக்க முடியும் என்றால் வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் மக்கள் மீள்குடியேறவும் முடியும்.
நடைபெற்றுமுடிந்த அனைத்து தேர்தல்களிலும் வில்பத்துவை காரணம் காட்டி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத்துக்கு எதிராக சேறு பூசி வாக்கு சேகரித்தவர்களே இன்று சிங்கராஜவில் பாதை அமைக்கிறார்கள். இவர்களால் சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது.
சிங்கராஜவுக்கு ஜனாதிபதி சென்று அப்பகுதி மக்களிடம் பாதை வேண்டுமா என கேட்டதை போல் வில்பத்து பகுதிக்கும் சென்று அம்மக்களின் அபிப்ராயத்தை கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.