ரோஹிங்கியா அகதிகளை கடத்தியதாக இந்தோனேசியாவில் நால்வர் கைது
மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை இந்தோனேசியாவின் ஏசெஹ் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்திய விவகாரத்தில் ஏசெஹ் பிராந்திய காவல்துறையினரால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் இந்தோனேசியர்கள் என்றும் 2 பேர் ரோஹிங்கியாக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிரான ஆதாரமாக இவர்கள் வசமிருந்த ஜி.பி.எஸ். கருவிகள், அலைப்பேசிகள் மற்றும் ஒரு படகினை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தோனேசியா குடிவரவுச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், ஆட்கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் இவர்களுக்கு 500 மில்லியன் இந்தோனேசிய ரூபாய் முதல் 1.5 பில்லியன் இந்தோனேசிய ரூபாய் வரை (இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரை) அபராதம் விதிக்கப்படக்கூடும் எனக் கூறப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக மியான்மர் அல்லது வங்கதேசத்திலிருந்து படகு வழியாக வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் இந்தோனேசியாவில் தஞ்சமடைந்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை