விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பவே அமலாக்கதுறையினர் சோதனை. பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் குற்றச்சாட்டு…
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள மாநில தலைமையகம், தேசிய நிர்வாகிகள் வீடு ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. அமலாக்கத்துறையினர் அத்துமீறி சோதனை நடத்தியற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகம் உட்பட நாட்டில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சதக்கத்துல்லா வரவேற்றார்.
மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், செயலாளர் நாகூர் மீரான், சென்னை மண்டல செயலாளர் முகைதீன் அஹமது குட்டி, வட சென்னை மாவட்ட தலைவர் பக்கீர் அஹமது, எஸ்.டி.பி.ஐ கட்சி மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரசீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் ஹாலித் முஹம்மது, இளந்தமிழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் அமலாக்க துறை சோதனையை கண்டித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி பேசுகையில்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் தேசிய நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில் அமலாக்கதுறையினர் நடத்திய சோதனை என்பது முற்றிலும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, விவசாயிகள் போராட்டத்தை மடைமாற்றம் செய்வதற்காக பாஜக அரசு செய்யும் அதிகார துஷ்பிரயோகம். பாஜக அரசின் தோல்வியை மறைப்பதற்காக மத்திய அரசின் இழிவான முயற்சி தான் இந்த அதிகார சோதனை. அரசியலமைப்பு நிறுவனங்களை அரசியல் கருவியாக பயன்படுத்துவதற்கான மற்றொரு உதாரணம் இந்த சோதனை.
இத்தகைய நடவடிக்கைகள் அத்திமீறல்கள் மூலம் நீதிக்கான குரலை எழுப்புவதிலிருந்து எம்மை தடுக்கவோ அல்லது உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டங்களை பலவீனப்படுத்தவோ முடியாது. இதனை சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.
இறுதியாக தென்சென்னை மாவட்ட தலைவர் அபுபக்கர் சாதிக் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை